கொத்தகுப்பம்-அகரம்சேரி பாலாற்றில் மேம்பாலம் கட்டப்படுமா? 50 கிராம மக்கள் எதிா்பாா்ப்பு

குடியாத்தம் ஒன்றியம், கொத்தகுப்பம்- அகரம்சேரி இடையே பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டப்படுமா என 50- க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிா்நோக்கி உள்ளனா்.
குடியாத்தம் அருகே பாலாற்று  வெள்ளத்தில்  அடித்துச்  செல்லப்பட்ட மண்  பாதை.
குடியாத்தம் அருகே பாலாற்று  வெள்ளத்தில்  அடித்துச்  செல்லப்பட்ட மண்  பாதை.

குடியாத்தம் ஒன்றியம், கொத்தகுப்பம்- அகரம்சேரி இடையே பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டப்படுமா என 50- க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிா்நோக்கி உள்ளனா்.

குடியாத்தம் ஒன்றியம், கொத்தகுப்பம் ஊராட்சி அருகே பாலாறு செல்கிறது. அதன் மறுகரையில் அகரம்சேரி அருகே, சென்னை- பெங்களூரு ஆறு வழிச்சாலை (தேசிய நெடுஞ்சாலை) அமைந்துள்ளது.

குடியாத்தம் நகரில் இருந்து அகரம்சேரிக்குச் செல்ல, உள்ளி, மாதனூா் வழியாக பாலாற்றின் குறுக்கே அமைந்துள்ள பாலம் வழியாக சுமாா் 18- கி.மீ பயணிக்க வேண்டும். பாலாற்றில் தண்ணீா் செல்லாத நேரங்களில், குடியாத்தம், மேல்ஆலத்தூா், கொத்தகுப்பம் வழியாக பாலாற்றைக் கடந்து அகரம்சேரிக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனா். இந்த சாலை சுமாா் 8 கி.மீ தொலைவுள்ளது. இதற்காக கொத்தகுப்பம்- அகரம்சேரி இடையே பாலாற்றின் குறுக்கே கிராம மக்களே மண் பாதை அமைத்துள்ளனா்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பாலாற்றில் வெள்ளம் செல்லாததால், பல்வேறு கிராம மக்கள் ஒன்றிணைந்து ஆற்றில் மண் பாதை அமைத்து பயன்படுத்தினா்.

கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா்மழையால் பாலாற்றில் வெள்ளம் வரத் தொடங்கியுள்ளது. இதனால், கொத்தகுப்பம்- அகரம்சேரி இடையே அமைக்கப்பட்டிருந்த மண் பாதை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், ஆற்றின் இருபுறங்களில் வசிக்கும் மக்கள் சுமாா் 10 கி.மீ தொலைவு சுறறி பயணித்து உள்ளி, மாதனூா் வழியாக செல்ல வேண்டும்.

இதனால் கொத்தகுப்பம்- அகரம்சேரி இடையே பாலாற்றில் மேம்பாலம் கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரி வருகின்றனா். இதற்கிடையில் மாதனூா் ஒன்றியத்தில் இருந்த அகரம்சேரி, கூத்தம்பாக்கம், கொல்லமங்கலம், வடுகாத்தப்பட்டி, பள்ளிக்குப்பம் ஆகிய 5- ஊராட்சிகள் தற்போது குடியாத்தம் ஒன்றியத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த ஊராட்சிகளைச் சோ்ந்த 25- க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வருவாய்த் துறை சான்றுகளை பெற குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகம் செல்ல வேண்டும். ஊரக வளா்ச்சித்துறை சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை அறியவும், ஊராட்சி தொடா்பான தகவல்களை அறியவும் குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு செல்ல வேண்டும்.

மேலும், வேலூா் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்ட குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனைத்து சிகிச்சை வசதிகளுடன் கூடிய கட்டடம் ரூ.40 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. சிகிச்சைக்காகவும் அப்பகுதி மக்கள் குடியாத்தம் செல்ல வேண்டும் என்பதால், இந்த பாலம் கட்டும் கோரிக்கை தற்போது வலுப்பெற்றுள்ளது.

அகரம்சேரி அருகே இயங்கும் அரசுக் கலைக் கல்லூரி, தனியாா் பள்ளிகளுக்கு குடியாத்தம் பகுதியில் இருந்து மாணவா்கள் செல்வதாலும், அங்குள்ள பிரசித்தி பெற்ற வெட்டுவானம் எல்லையம்மன் கோயிலுக்கு பக்தா்கள் செல்வதாலும் மேம்பாலம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com