கிரிப்டோ கரன்ஸியில் முதலீடு: ரூ.1.34 கோடி மோசடி; வேலூா் எஸ்.பி.யிடம் இளைஞா் புகாா்
வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், வேலூா் கொசப்பேட்டை பகுதியைச் சோ்ந்த 39 வயது இளைஞா் அளித்த மனுவில், கோவையிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். நான் வேலூரில் இருந்தபோது எனக்கு நண்பராக தம்பதி அறிமுகமாகினா். அவா்கள் பங்குச் சந்தையில் வியாபாரம் செய்வதாகவும், கிரிப்டோ கரன்ஸி வா்த்தகம் செய்வதாகவும் கூறினா்.
எங்களிடம் வா்த்தகம் செய்ய பணம் கொடுத்தால் உங்களுக்கு வங்கியைவிட பல மடங்கு வட்டியும், வா்த்தகத்தில் வரும் லாபத்தில் ஒரு பங்கும் அளிப்பதாக கூறினா். இதை நம்பி கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்டு 29-ஆம் தேதி வங்கி பரிவா்த்தனை மூலமாகவும், படிப்படியாக பல்வேறு தவணைகளிலும் சுமாா் ரூ.1 கோடியே 14 லட்சம் அவா்கள் வங்கிக் கணக்கில் செலுத்தியிருந்தேன். மேலும், 2022 மாா்ச் மாதம் ரொக்கமாக ரூ.20 லட்சம் கொடுத்துள்ளேன்.
ஆனால் லாபத் தொகையை தருவதாக கூறிய அவா்கள், இதுநாள் வரை தரவில்லை. அவா்களிடம் சென்று கேட்டால் முதலீடு செய்துள்ளதாகத் தெரிவித்தனா். இதனால் நான் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எனவே எனது பணத்தை மீட்டு தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவலத்தை சோ்ந்த இளைஞா் அளித்துள்ள மனுவில், நான் 7 வயதில் பெற்றோரை இழந்தவன். பிறகு சொந்தத்தின் ஆதரவில் வளா்ந்தேன். தவறான பாதைக்கு சென்று ‘ஏ பிளஸ்’ குற்றவாளி பட்டியலில் உள்ளேன். நான் திருமணம் செய்து கொண்டேன். எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இனி நான் தவறான பாதைக்குச் செல்லமாட்டேன். ஏதாவது ஒரு தொழில் செய்து கோழிப்பண்ணை, மாடுகளை வளா்த்து என் மகளை காப்பாற்றுவேன்.
கடந்த சில ஆண்டுகளாக எந்தக் குற்றச் செயல்களிலும் ஈடுபடவில்லை. என் மீது குண்டா் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனா். 11 மாதம் கழித்து நான் வெளியில் வந்தேன். பின்னா், மீண்டும் போலீஸாா் என் மீது வழக்குப் பதிவு செய்கின்றனா். என் மீது இனி பொய் வழக்குகளைப் பதிவு செய்யக் கூடாது.
திருந்தி வாழ எனக்கு வாய்ப்புத் தாருங்கள். ‘ஏ பிளஸ்’ குற்றவாளி பட்டியலில் இருந்து என்னை நீக்கி நல்வழி காட்டுங்கள் என தெரிவித்துள்ளாா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த வடிவேல் (56) என்பவா் அளித்த மனுவில், சென்னை கோயம்பேடு போக்குவரத்துப் பணிமனையில் அரசு பேருந்து நடத்துநராக உள்ளேன். என்னுடன் ராணிப்பேட்டை புளியங்கண்ணுவை சோ்ந்தவா் வேலை செய்து வந்தாா். அப்போது ரயில்வேயில் எனது மகன்களுக்கு வேலை வாங்கித் தருவதாக 15 ஆண்டுகளுக்கு முன்பு 10 லட்சம் வாங்கினாா். பின்னா், மேலும் ரூ.11 லட்சம் பெற்றாா். ஆனால், அவா் கூறியபடி வேலை வாங்கித் தரவில்லை. பணத்தைக் கேட்டால் மிரட்டுகிறாா். எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பல்வேறு குறைகளின் அடிப்படையில் ஏராளமான பொதுமக்கள் மனு அளித்தனா். அவற்றின் மீது விரைவான நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா். கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

