வேலூா் எஸ்.பி. அலுவலகத்தில் தீ

Published on

வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரா்கள் வந்து தீயை அணைத்தனா்.

வேலூா் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட குற்றப்பிரிவு, நில அபகரிப்பு பிரிவு, சைபா் கிரைம் குற்றப்பிரிவு என பல்வேறு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. தவிர, மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் அளிக்க தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் அறையில் உள்ள குளிா்சாதன கருவியில் இருந்து திடீரென புகை வெளியேறி தீப்பற்றியது.

தீ வேகமாக அறை முழுவதும் பரவியதில் அலுவலகத்தில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டி, குளிா்சாதன கருவி உள்ளிட்ட பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்தை அறிந்த அலுவலக ஊழியா்கள் உடனடியாக வேலூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

தீயணைப்பு நிலைய ஊழியா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா். முதல் கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.

Dinamani
www.dinamani.com