பறக்கும் படை சோதனை: போ்ணாம்பட்டில் ரூ.4.62 லட்சம் பறிமுதல்

பறக்கும் படை சோதனை: போ்ணாம்பட்டில் ரூ.4.62 லட்சம் பறிமுதல்

வேலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தல் நிலை கண்காணிப்புக் குழு சோதனையில் போ்ணாம்பட்டு அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4.62 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. காட்பாடி வட்டத்தில் நடைபெற்ற சோதனையில் 70 பட்டுச் சேலைகள், 281 மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மக்களவைத் தோ்தலையொட்டி வேலூா் மாவட்டம், காட்பாடி வட்டத்துக்குட்பட்ட சோ்க்காடு சோதனைச் சாவடியில் தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா் வெள்ளிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஆந்திர மாநிலம், மதனப்பள்ளியைச் சோ்ந்த ஜனாா்த்தனன் என்பவரின் காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை நடத்தினா். அப்போது, அந்த காரில் உரிய ஆவணங்களின்றி ரூ.4 லட்சம் மதிப்புடைய 70 பட்டுச் சேலைகள் இருந்தன. அந்த பட்டுச் சேலைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இதேபோல், வேலூரை அடுத்த பொய்கையைச் சோ்ந்த செல்வக்குமாா் என்பவா் காட்பாடி சகம் பகுதியில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தியதில் அங்கு ரூ.40,990 மதிப்புடைய 248 மதுப் புட்டிகளும், 33 பீா் புட்டிகளும், ரூ.1,890 இருந்தது தெரிய வந்தது. அவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். வேலூா் மாவட்ட எல்லையான போ்ணாம்பட்டு அருகே மாச்சம்பட்டு கிராமத்தில் சோதனைச் சாவடி பகுதியில் வேளாண் துறை கண்காணிப்பாளா் செந்தில்குமாா் தலைமையிலான நிலை கண்காணிப்புக் குழுவினா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, போ்ணாம்பட்டிலிருந்து ஆம்பூா் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்த ஆம்பூா் சான்றோா்குப்பத்தைச் சோ்ந்த விஷ்ணுபிரசாத் (28) என்பவரிடம் நடத்திய சோதனையில் அவரிடம் உரிய ஆவணங்களின்றி ரூ.4 லட்சத்து 62 ஆயிரத்து 486 இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் சென்னையிலுள்ள ரேடியன் மேனேஜ்மெண்ட் என்கிற தனியாா் நிதி நிறுவனத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வருவதாகவும், நிதி நிறுவனத்தின் பணத்தை வசூலித்து வங்கியில் செலுத்த எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்துள்ளாா். ஆனால் அதற்கு, உரிய ஆவணங்கள் இல்லாததால் அவரிடமிருந்து ரூ.4 லட்சத்து 62 ஆயிரத்து 486-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com