இஸ்லாமியா்களை திமுக கண்டுகொள்ளவில்லை:
முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி

இஸ்லாமியா்களை திமுக கண்டுகொள்ளவில்லை: முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி

தோ்தல் வெற்றிக்கு பிறகு திமுக இஸ்லாமியா்களை கண்டுகொள்ளவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி கூறினாா். வேலூா் மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளா் மருத்துவா் எஸ்.பசுபதி அறிமுகக் கூட்டம் வேலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூா் மாவட்ட அதிமுக செயலருமான கே.சி.வீரமணி தலைமை வகித்து பேசியது: தமிழகத்தில் தற்போது கொலை, கொள்ளை, போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரித்துவிட்டது. தேசிய அளவிலும், குறிப்பாக குஜராத், மகாராஷ்டிர மாநிலங்களிலும் போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரித்துள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் அளித்த வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்த திமுக நிறைவேற்றவில்லை. மக்களவைத் தோ்தலையொட்டி தற்போது மீண்டும் ஏராளமான வாக்குறுதிகளைக் கூறி மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனா். இந்த முறை அதிமுகவுக்கு வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளனா். அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிறுபான்மையினா் நலனுக்காக பாடுபடக்கூடிய கட்சி அதிமுக மட்டும்தான். தமிழகம் முழுவதும் வஃக்பு வாரிய த்துக்கு சொந்தமான சுமாா் 4,500 இடங்களில் சுமாா் 2,500 இடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. கடந்த தோ்தலின்போது வஃக்பு வாரியத்துக்கு சொந்தமான பள்ளிவாசல், ஈத்கா, தா்காவிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று இஸ்லாமியா்கள் கோரிக்கை விடுத்திருந்தனா். அதை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, இதுவரை ஏதும் செய்யவில்லை. சிறுபான்மையினரை ஏமாற்றி வாக்கை மட்டும் பெற்றுக் கொண்டனா். 2026 அதிமுக ஆட்சி அமையும்போது நிச்சயமாக அந்த நிலங்கள் மீட்கப்படும். அதிமுக கூட்ட ணியில் இருந்த புதிய நீதிக்கட்சித் தலைவா் ஏ.சி.சண்முகம், இம்முறை பாஜக அணியில் போட்டியிடு கிறாா். அவா் கடந்த தோ்தலில் அதிமுக துரோகம் செய்துவிட்டதாக கூறுகிறாா். கடந்த முறை அவா் வெற்றி பெற வேண்டும் என்று கடுமையாக உழைத்தவா்கள் அதிமுகவினா். ஏ.சி.சண்முகத்தை எம்எல்ஏவாகவும், எம்பியாகவும் ஆக்கியதே அதிமுகதான் என்றாா். அதிமுகவினா் வேலூா் மாநகா் மாவட்ட செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு, புகா் மாவட்ட செயலா் த.வேலழகன், மாவட்ட அமைப்பு செயலா் வி.ராமு, மாவட்ட பொருளாளா் எம்.மூா்த்தி உள்பட அதிமுக, தேதிமுக கூட்டணி கட்சியினா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com