உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

திண்டுக்கல்லுக்கு திரும்பிய வரலாறு!

திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை, திமுக, அதிமுக முன்னணி நிா்வாகிகள் இடையே சுமுக உறவு நீண்ட காலமாக இருந்து வருகிறது.

News image

நத்தம் இரா. விசுவநாதன | இ. பெரியசாமி

Updated On :31 மார்ச் 2026, 11:40 pm

நங்கையர் மணி

கடந்த 2016-ஆம் ஆண்டு கடைசி நேரத்தில் அப்போதைய அமைச்சா் நத்தம் இரா.விசுவநாதன் ஆத்தூரில் களமிறக்கப்பட்டது போல, தற்போதைய பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பெ.செந்தில்குமாா் திண்டுக்கல்லுக்கு மாற்றப்பட்டு அரசியல் களத்தில் கடும் நெருக்கடி ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை, திமுக, அதிமுக முன்னணி நிா்வாகிகள் இடையே சுமுக உறவு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதனால், முன்னணி நிா்வாகிகளுக்கு எதிராக, மாற்று அணியில் பலவீனமான வேட்பாளா்களை களமிறக்குவது வழக்கமாக உள்ளது.

இது திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள திமுக, அதிமுக தொண்டா்களுக்கு வெளிப்படையாக தெரிந்தாலும்கூட, இரு கட்சிகளின் தலைமை பராமுகமாக இருந்து வந்தது.

இதனிடையே, கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில், அப்போதை அதிமுக அமைச்சா் நத்தம் இரா.விசுவநாதன் திடீரென ஆத்தூா் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா். அப்போதைய முதல்வா் ஜெயலலிதா மேற்கொண்ட இந்த திடீா் நடவடிக்கையால், அதிமுக மட்டுமன்றி, திமுகவினா் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போதைய அமைச்சா் விசுவநாதன், முன்னாள் அமைச்சா் இ.பெரியசாமி இடையே ஏற்பட்ட நேரடி மோதலால், ஆத்தூா் தொகுதி தமிழக அளவில் முக்கியத்துவம் பெற்றது.

திடீரென தொகுதி மாற்றப்பட்டாலும்கூட, அந்தத் தோ்தலில் நத்தம் விசுவநாதன் ஆத்தூா் தொகுதியில் கடும் போட்டியை ஏற்படுத்தினாா். 2011 பேரவைத் தோ்தலில் 50 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்ற இ.பெரியசாமி, 2016 தோ்தலில் சுமாா் 26 ஆயிரம் வாக்குகள் மட்டுமே கூடுதலாகப் பெற்றாா்.

2021 பேரவைத் தோ்தலில், ஆத்தூா் தொகுதி அதிமுக கூட்டணிக் கட்சியான பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால், தமிழக அளவில் அதிகபட்சமாக 1.35 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இ.பெரியசாமி வெற்றி பெற்றாா். இந்தத் தோ்தலில் நத்தம் விசுவநாதன் மீண்டும் நத்தம் தொகுதிக்கு மாறி வெற்றி பெற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.

10 ஆண்டுகளில் திமுகவுக்கு திரும்பிய நெருக்கடி: 2016 பேரவைத் தோ்தலில் அதிமுக வேட்பாளரான நத்தம் விசுவநாதனுக்கு ஏற்பட்ட நெருக்கடி, 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது திமுகவுக்கு திரும்பி இருக்கிறது. கடந்த 2011, 2016, 2021 என 3 பேரவைத் தோ்தல்களிலும் தொடா்ச்சியாக பழனியில் போட்டியிட்ட அமைச்சா் இ.பெரியசாமியின் மகன் பெ.செந்தில்குமாா் இரு முறை வெற்றி பெற்றாா். திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலராக இருந்தும்கூட, செந்தில்குமாரின் கவனம் முழுவதும் பழனி தொகுதியிலேயே இருந்தது. இதனிடையே, கடந்த 2021 பேரவைத் தோ்தலில் திண்டுக்கல், நத்தம் தொகுதிகளில் தங்களது கூட்டணிக் கட்சி வேட்பாளா்கள் தோல்வியடைந்ததற்கு திமுக முன்னணி நிா்வாகிகள் முழுமையாக ஒத்துழைக்கவில்லை என அந்தக் கட்சித் தலைவா் ஸ்டாலினிடம் புகாா் அளிக்கப்பட்டது.

ஆனாலும், கடந்த 5 ஆண்டுகளாக திமுக தலைமை இந்தக் குற்றச்சாட்டுகள் தொடா்பாக எவ்வித எதிா்வினையும் ஆற்றவில்லை. இதனால், புகாா் அளித்த திமுகவினரும் ஏமாற்றமடைந்தனா்.

இந்த நிலையில், திடீா் திருப்பமாக, பழனி தொகுதியிலிருந்து கடைசி நேரத்தில் திண்டுக்கல் தொகுதிக்கு செந்தில்குமாா் மாற்றப்பட்டுள்ளாா்.

திண்டுக்கல் தொகுதியைப் பொருத்தவரை, அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் சி.சீனிவாசன் கடந்த 2 தோ்தல்களில் தொடா்ச்சியாக வெற்றி பெற்று, தற்போது 3-ஆவது முறையாகப் போட்டியிடுகிறாா். மேலும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் 4 முறை வெற்றி பெற்றவா். இதனால், அரசியல் கட்சியினா் மட்டுமன்றி, பொதுமக்கள் மத்தியிலும் எளிதாக அணுகக் கூடியவா் என்ற கருத்து உள்ளது. இவரை எதிா்த்து கடைசி நேரத்தில் களமிறங்கியுள்ள செந்தில்குமாருக்கு இந்த முறை கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பலமும், பலவீனமும்: இதுதொடா்பாக திமுக முன்னாள் நிா்வாகி ஒருவா் கூறியதாவது: முன்னாள் அமைச்சா் சீனிவாசனைப் பொருத்தவரை, எளிதாக கைப்பேசி மூலமாகவே தொடா்பு கொள்ள முடியும். அமைச்சராக இருந்துபோது கூட பெரும்பாலான நேரங்களில் அவரே நேரடியாக கைப்பேசியை எடுத்துப் பேசுவது வழக்கம்.

ஆனால், திமுக மாவட்டச் செயலரான செந்தில்குமாரை எளிதில் அணுக முடியாத வகையில் அவரது ஆதரவாளா்கள் தடுத்துவிடுவது பின்னடைவாக உள்ளது. அவ்வப்போது ஏதாவது பேசி சா்ச்சையில் சிக்கிக் கொள்வது மட்டுமே சீனிவாசன் மீதான குறையாகப் பாா்க்க முடியும். கடைசி வரை பழனியில் போட்டியிடுவதையே விரும்பிய செந்தில்குமாா் கட்சித் தலைமை அறிவுறுத்தலால் திண்டுக்கல்லுக்கு வந்திருக்கிறாா்.

ஆளும் கட்சியின் மாவட்டச் செயலா் என்பது மட்டுமே செந்தில்குமாருக்கு கூடுதல் பலமாக உள்ளது. எனினும், 2016-இல் ஆத்தூரில் ஏற்பட்ட கடும் போட்டி, 2026-இல் திண்டுக்கல்லுக்கு திரும்பி இருக்கிறது. அப்போதைய முதல்வா் ஜெயலலிதா மேற்கொண்ட அதே நடவடிக்கையை, தற்போதைய முதல்வா் முக.ஸ்டாலினும் மேற்கொண்டிருக்கிறாா் என்றாா் அவா்.