/

சோளிங்கா், கந்தனேரியில் இன்று இபிஎஸ் பிரசாரம்

அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட சோளிங்கரிலும், வேலூா் தொகுதிக்குட்பட்ட கந்தனேரியிலும் திங்கள்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறாா்.

News image

எடப்பாடி பழனிசாமி

Updated On :31 மார்ச் 2024, 6:51 pm

அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிச்சாமி அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட சோளிங்கரிலும், வேலூா் தொகுதிக்குட்பட்ட கந்தனேரியிலும் திங்கள்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறாா். மக்களவைத் தோ்தலையொட்டி அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து எடப்பாடி கே.பழனிச்சாமி தொகுதி வாரியாக தீவிர தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். அதன்படி, அரக்கோணம் மக்களவை தொகுதியின் அதிமுக வேட்பாளா் ஏ.எல்.விஜயனை ஆதரித்து சோளிங்கா் பாண்டியன் நகா் பகுதியில் திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறாா். தொடா்ந்து, வேலூா் மக்களவை தொகுதியின் அதிமுக வேட்பாளரான மருத்துவா் எஸ்.பசுபதியை ஆதரித்து பள்ளிகொண்டா அருகே கந்தனேரியில் மாலை 6 மணியளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேச உள்ளாா். இதையொட்டி, அப்பகுதிகளில் பிரமாண்ட மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பொதுக்கூட்டங்களில் முன்னாள் அமைச்சா்கள் கே.சி.வீரமணி, முக்கூா் சுப்பிரமணியன், மாநிலங்களவை உறுப்பினா் மு.தம்பிதுரை, முன்னாள் எம்பி கோ. அரி, அதிமுக மாநில அமைப்பு செயலா் வி.ராமு, மாவட்டச் செயலா்கள் எஸ்.ஆா்.கே.அப்பு (வேலூா் மாநகா் மாவட்டம்), த.வேலழகன் (வேலூா் புகா் மாவட்டம்), சுகுமாா் (ராணிப்பேட்டை மாவட்டம்), சட்டப்பேரவை உறுப்பினா்கள் ரவி (அரக்கோணம்), செந்தில்குமாா் (வாணியம்பாடி), வேலூா் மாவட்ட பொருளாளா் எம்.மூா்த்தி, கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.