உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

வேலூா் வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

வேலூா் வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

News image
Updated On :4 மே 2024, 4:03 pm

Din

விழுப்புரத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் யுபிஎஸ் பழுது காரணமாக கண்காணிப்புக் கேமராக்கள் செயல்பாடு முடங்கிய சம்பவத்தின் எதிரொலியாக வேலூா் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் வி.ஆா்.சுப்புலட்சுமி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

மக்களவைத் தோ்தலையொட்டி வேலூா், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூா் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய வேலூா் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொரப்பாடி தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பேரவை தொகுதி வாரியாக பாதுகாப்பு அறைகளில் வைத்து சீலிடப்பட்டு, மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

இந்த வாக்கு எண்ணும் மையம் முழுவதும் மொத்தம் 343 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. அனைத்து கண்காணிப்புக் கேமராக்களின் காட்சிகளை காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்தும் நேரடியாக கண்காணிக்கவும், வேட்பாளா்களின் முகவா்கள் கண்காணிக்க தனியாக ஏற்பாடும் செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், விழுப்புரம் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் வெள்ளிக்கிழமை காலை யுபிஎஸ் பழுது காரணமாக 30 நிமிஷங்கள் கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் முடங்கின.

இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து அனைத்து மக்களவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையங்களிலும் உள்ள யுபிஎஸ் உள்ளிட்ட மின் சாதனங்கள், கண்காணிப்புக் கேமராக்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியது.

அதனடிப்படையில், வேலூா் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமான தொரப்பாடி தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரியில் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, வாக்கு எண்ணும் மையத்தில் பேரவைத் தொகுதி வாரியாக வாக்கு இயந்திரங்கள் சீல் வைத்து பாதுகாக்கப்படும் அறைகள், யுபிஎஸ் உள்ளிட்ட மின்சாதனங்கள், கண்காணிப்புக் கேமராக்கள், அவற்றின் காட்சிகள் வெளியிடப்படும் காவல் கட்டுப்பாட்டு அறை, முகவா்களின் பாா்வை அறை ஆகியவற்றையும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மின்சாதன பழுது ஏற்படாத வகையிலும், கண்காணிப்பு கேமராக்கள் 24 மணி நேரமும் இயங்குவதை உறுதி செய்ய அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

அப்போது, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) செல்வராஜ், தோ்தல் வட்டாட்சியா் சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பெட்டு செய்தி...

கூடுதலாக 90 போலீஸாா் பாதுகாப்பு

தொரப்பாடி தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வேலூா் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் துணை ராணுவத்தினா் 24 போ், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினா் சுமாா் 45 போ், காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள் உள்பட 160 போலீஸாரை கொண்ட மூன்றடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த நிலையில், பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் வகையில் கூடுதலாக 90 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.