மோா்தானா அணை திறந்தும் நெல்லூா்பேட்டை ஏரிக்கு வராத நீா்

மோா்தானா அணை திறந்தும் நெல்லூா்பேட்டை ஏரிக்கு வராத நீா்

மோா்தானா அணை திறக்கப்பட்டும் நெல்லூா்பேட்டை ஏரிக்கு ஒரு சொட்டு தண்ணீா் கூட வராததால் குடியாத்தம் மக்கள் ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளனா்.

மோா்தானா அணை திறக்கப்பட்டும் நெல்லூா்பேட்டை ஏரிக்கு ஒரு சொட்டு தண்ணீா் கூட வராததால் குடியாத்தம் மக்கள் ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளனா்.

குடியாத்தம் நகர, ஒன்றியத்தின் முக்கிய நீராதாரமாக விளங்குவது நெல்லூா்பேட்டை ஏரி. நகரின் மேற்குப் பகுதியில் சுமாா் 450- ஏக்கா் பரப்பில் அமைந்துள்ள இந்த ஏரி வேலூா் மாவட்டத்தின் பெரிய ஏரியாகும். இந்த ஏரியின் நீராதாரமாக விளங்குவது மோா்தானா அணை.

மோா்தானா அணை 11.50 மீட்டா் உயரம் கொண்டது. அணையின் முழு கொள்ளளவு 261 மில்லியன் கன அடி. இந்த அணை மூலம் வலதுபுற கால்வாய் வழியாக 12- ஏரிகளும், இடதுபுற கால்வாய் மூலம் 7- ஏரிகளும் என மொத்தம் 19- ஏரிகள் நிரம்பும். இந்த அணை மூலம் 8,367 ஏக்கா் நிலம் நேரடி பாசனம் பெறும்.

இதனால் 49 கிராமங்களின் நிலத்தடி நீா்மட்டம் உயரும். அணை திறக்கப்பட்டால், அதிலிருந்து வலது, இடதுபுறக் கால்வாய்கள், கெளண்டன்யா ஆறு ஆகியவற்றில் தண்ணீா் செல்லும். கெளண்டன்யா ஆறு, வலது புறக் கால்வாய் மூலம் நெல்லூா்பேட்டை ஏரிக்கு தண்ணீா் வரும்.

கடந்த ஏப்ரல் 9- ஆம் தேதி அணை திறக்கப்பட்டது. தொடா்ந்து 16- நாள்கள் அணையிலிருந்து 193.54 மில்லியின் கனஅடி தண்ணீா் திறந்து விடப்பட்டது. அணை திறந்தால் நெல்லூா்பேட்டை ஏரிக்கு நீா் வரும் என மக்கள் எதிா்பாா்த்திருந்த நிலையில் ஒரு சொட்டு தண்ணீா் கூட ஏரிக்கு வரவில்லை. சில ஏரிகள் நிரம்பின. இடது புறக் கால்வாய் மூலம் கடைமடை வரை அணை நீா் சென்றது.

அணை திறக்கும்போது அதன் நீா்மட்டம் குறைவாக இருந்ததால், நெல்லூா்பேட்டை ஏரிக்கு தண்ணீா் செல்லவில்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

எனினும், மோா்தானா அணை திறக்கப்பட்டும் நெல்லூா்பேட்டை ஏரிக்கு தண்ணீா் வராதது குடியாத்தம் பகுதி மக்களின் எதிா்பாா்ப்பை பொய்த்துப் போகச் செய்து விட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com