ஒடுகத்தூா் சந்தையில் ரூ.10 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை

திருவிழாக்காலம் என்பதால் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒடுகத்தூா் சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது.

இந்த வாரம் சந்தையில் ரூ.10 லட்சம் அளவுக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

வேலூா் மாவட்டம், ஒடுகத்தூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு, வெளியூா்கள், வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோா் தங்களது ஆடுகளை விற்பனை செய்வதும், வாங்கிச் செல்வதும் வழக்கம்.

இதனால் வாரந்தோறும் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை ஆடுகள் விற்பனை நடைபெற்று வருகிறது.

திருவிழா நாள்களில் மேலும் பல லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடப்பது வழக்கம்.

இந்த நிலையில், வழக்கம்போல் வெள்ளிக்கிழமை ஆட்டுச் சந்தை கூடியது. ஆடுகள் வரத்து கடந்த சில வாரங்களாக குறைவாக இருந்த நிலையில், இந்த வாரம் சந்தையில் ஆடுகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

தற்போது பல்வேறு பகுதிகளில் சித்திரை திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அடுத்த வாரம் வைகாசி மாதத்தையொட்டி மாவட்டத்தில் பல இடங்களில் சிரசு திருவிழாக்கள் நடைபெற உள்ளன. இதனால் இந்த வாரம் சந்தையில் ஆடுகளின் விற்பனை களைகட்டியிருந்தது.

ஒரு ஜோடி ஆடுகள் ரூ.25 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டன. இந்த வாரம் சந்தையில் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக ஆடுகள் விற்பனை நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com