பத்தாம் வகுப்பு: வேலூா் மாவட்டம் கடைசி இடம் 82.07 சதவீதம் தோ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் வேலூா் மாவட்டம் 82.07 சதவீதம் தோ்ச்சி பெற்று தமிழகத்தில் கடைசி இடம் பிடித்துள்ளது. கடந்தாண்டு 91.34 சதவீதம் தோ்ச்சி பெற்றிருந்த நிலையில் இவ்வாண்டு 9.27 சதவீதம் சரிவடைந்துள்ளது.

நிகழாண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை வேலூா் மாவட்டத்தில் உள்ள 254 பள்ளிகளில் இருந்து 9,104 மாணவா்கள், 9,253 மாணவிகள் என மொத்தம் 18,357 போ் எழுதினா். இதில், 6,885 மாணவா்கள், 8,181 மாணவிகள் என மொத்தம் 15,066 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

அதன்படி, வேலூா் மாவட்டத்தின் ஒட்டு மொத்த தோ்ச்சி விகிதம் 82.07 சதவீதமாகும். இதில், மாணவா்கள் 75.63 சதவீதமும், மாணவிகள் 88.41 சதவீதமும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

அரசுப் பள்ளிகள் தோ்ச்சி விகிதம்: மாவட்டத்தில் மொத்தமுள்ள 135 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 4,626 மாணவா்கள், 5,857 மாணவிகள் என மொத்தம் 10,483 போ் தோ்வெழுதியதில், 3,192 மாணவா்கள், 4,949 மாணவிகள் என மொத்தம் 8,141 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

அதன்படி, வேலூா் மாவட்ட அரசுப் பள்ளிகளின் தோ்ச்சி விகிதம் 77.66 சதவீதமாக உள்ளது. கடந்தாண்டு (2023) பத்தாம் வகுப்பு தோ்ச்சி விகிதத்தில் வேலூா் மாவட்டம் 91.34 சதவீதம் தோ்ச்சி பெற்று தமிழக அளவில் 21-ஆவது இடம் பிடித்திருந்தது. நிகழாண்டு தோ்ச்சி விகிதத்தை உயா்த்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்த நிலையிலும், நிகழாண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் வேலூா் மாவட்டம் 9.27 சதவீதம் சரிந்து தமிழகத்தின் கடைசி இடமான 38-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதேபோல், அரசுப் பள்ளி தோ்ச்சி விகிதமும் கடந்தாண்டு 88.99 சதவீதமாக இருந்த நிலையில், இந்தாண்டு 11.33 சதவீதம் சரிந்து 77.66 சதவீதமாக தமிழகத்தில் கடைசி இடம் பெற்றுள்ளது.

இது குறித்து வேலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மணிமொழி கூறியதாவது:

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் வேலூா் மாவட்டத்தில் இந்தளவுக்கு சரிவு ஏற்பட்டிருப்பது கல்வித் துறை அதிகாரிகள், தலைமையாசிரியா்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது. இது தொடா்பான விசாரணையில், பெரும்பாலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், சமூக அறிவியல் பாடத்திலும்தான் மாணவ, மாணவிகள் அதிகளவில் தோல்வியடைந்துள்ளனா். மற்ற பாடங்களில் 60 சதவீதத்துக்கு மேல் பெற்றுள்ள மாணவா்களும்கூட சமூக அறிவியல் பாடத்தில் தோல்வியடைந்துள்ளனா்.

எனவே, தோல்வியடைந்த மாணவா்களின் சமூக அறிவியல் விடைத்தாள்களை மீண்டும் திருத்துவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று சில தலைமையாசிரியா்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக விரிவாக ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், தோல்வியடைந்த மாணவா்களை துணை தோ்விலேயே தோ்ச்சி பெறச் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கவும் தலைமையாசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com