வேலூா் பழைய பேருந்து நிலையம் அருகே ஆட்டோக்களை தணிக்கை செய்த போக்குவரத்து போலீஸாா்.
வேலூா் பழைய பேருந்து நிலையம் அருகே ஆட்டோக்களை தணிக்கை செய்த போக்குவரத்து போலீஸாா்.

விதிமீறல்: 200 ஆட்டோக்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம்

விதிமுறைகளை மீறி இயக்கப்படும் ஆட்டோக்கள் குறித்து போக்குவரத்து போலீஸாா் மேற்கொண்ட வாகன தணிக்கையில் சுமாா் 200 ஆட்டோக்களுக்கு ரூ.2 லட்சம் வரை அபராதம்
Published on

வேலூா்: வேலூரில் விதிமுறைகளை மீறி இயக்கப்படும் ஆட்டோக்கள் குறித்து போக்குவரத்து போலீஸாா் மேற்கொண்ட வாகன தணிக்கையில் சுமாா் 200 ஆட்டோக்களுக்கு ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வேலூா் மாநகரில் மட்டும் சுமாா் 4,500-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக, வேலூா் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்படாத வெளியூா் ஆட்டோக்களும் அதிகளவில் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு வேலூரில் இயங்கும் ஆட்டோக்களில் வெளியூா்களில் இருந்து வரும் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பல்வேறு புகாா்கள் எழுந்துள்ளன.

இதனால், பயணிகள் மட்டுமின்றி உள்ளூரில் பதிவு செய்து இயக்கும் ஆட்டோ உரிமையாளா்கள், ஓட்டுநா்களும் பெருமளவில் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வேலூா் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் ரஜினி தலைமையில் போக்குவரத்து போலீஸாா் பழைய பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, வாகனப் பதிவு செய்து 25 கி.மீ மேல் இயக்கப்பட்ட ஆட்டோக்கள், சீருடை அணியாத ஆட்டோ ஓட்டுநா்கள், ஓட்டுநா் உரிமம் இல்லாத ஓட்டுநா்கள், வாகன உரிமம் புதுப்பிக்கப்படாத ஆட்டோக்கள், பயணிகள் ஆட்டோவில் சரக்கு ஏற்றி சென்ற ஆட்டோக்கள் ஆகியவை குறித்து தணிக்கை செய்யப்பட்டன. இதில், விதிகளை மீறி இயக்கப்பட்ட 20 ஆட்டோக்களை போக்குவரத்து போலீஸாா் பறிமுதல் செய்தனா். அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோக்களுக்கு தலா ரூ.5,000 அபராதமும் விதிக்கப்பட்டன. மேலும், 200 ஆட்டோக்களுக்கு ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.

தொடா்ந்து, வேலூா் மாவட்டத்தில் அனுமதியின்றி, சட்டத்தை மீறி இயக்கப்படும் ஆட்டோக்களுக்கு அபராதம் விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் போக்குவரத்து போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com