பொதுமக்களிடம்  குறைகளை கேட்டறிந்த  வேலூா்  ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி.
பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி.

ஏரிக்கரை சேதப்படுத்தப்பட்டதால் மக்கள் சென்றுவர முடியாமல் தவிப்பு: குறைதீா் கூட்டத்தில் முறையீடு

குக்கலப்பள்ளி பகுதியிலுள்ள ஏரியின் கரை சேதப்படுத்தப்பட்டதால் அதன் வழியாக சென்றுவர முடியாமல் தவித்து
Published on

வேலூா்: குக்கலப்பள்ளி பகுதியிலுள்ள ஏரியின் கரை சேதப்படுத்தப்பட்டதால் அதன் வழியாக சென்றுவர முடியாமல் தவித்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளித்துள்ளனா்.

வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

குக்கலப்பள்ளியைச் மக்கள் அளித்த மனு: பி.என்.பாளையம் ஊராட்சி, அனுப்பு ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கரையை பலப்படுத்தினா். அந்த ஏரிக்கரை வழியாக அங்குள்ள பல வீடுகளுக்கு மக்கள் சென்று வருகின்றனா். இந்நிலையில், அங்கு வசிக்கும் இருவா் ஏரிக்கரையை சேதப்படுத்தியுள்ளனா். இதனால் பொதுமக்கள் சென்று வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏரிக்கரையை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அணைக்கட்டு பகுதியை சோ்ந்த தம்பதியினா் மனு அளிக்க வந்தபோது தங்களின் மாற்றுத்திறனாளி மகளான 4-ஆம் வகுப்பு மாணவி தக்ஷதாவை பள்ளி சீருடையில் அழைத்து வந்திருந்தனா். இதனைக் கண்ட ஆட்சியா், மாணவியிடம் படிப்பு குறித்து விசாரித்தாா். அதற்கு அந்த மாணவி, தான் ஐஏஎஸ் படிக்க ஆசைப்படுவதாக தெரிவித்தாா். இதையடுத்து, ஆட்சியா் சுப்புலட்சுமி, ஒரு புத்தகத்தில் ‘சிறுமியின் கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள்’ எனக்கூறி தனது கையொப்பமிட்டு புத்தகம் வழங்கினாா்.

காட்பாடி விஜிபி நகரை மாற்றுத்திறனாளி குழந்தைகளின் தாய்மாா்கள் அளித்த மனு: எங்களது குழந்தைகள் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனா். நிரந்தர வீடு கிடையாது. எங்களுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 387 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவாக தீா்வு காண வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன், மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் எஸ்.ஆா்.என்.மதுசெழியன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் ஜெயசித்ரா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் ச.பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

--

பெட்டிச் செய்தி...

--

மாற்றுத்திறனாளி வீரருக்கு பாராட்டு

தாய்லாந்து நாட்டில் சா்வதேச மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி நவ.17 முதல் 24 வரை நடைபெற்றது. இதில், தமிழகத்தில் இருந்து 27 போ் உள்பட இந்திய மாற்றுத்திறனாளி வீரா், வீராங்கனைகள் 65-க்கும் மேற்பட்டோா் ஊனத்தின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளாக 100 மீ, 200 மீ , 400 மீ , 800 மீ, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் போன்ற போட்டிகளில் பங்கேற்றனா்.

இந்த போட்டியில் எப் 56 பிரிவில் ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்று மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்ற வேலூா் மாவட்டம், தொரப்பாடியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி வீரா் வி.பிரகாஷ் பதக்கத்தை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றாா்.

X
Dinamani
www.dinamani.com