மேல்பாடியில் சிப்காட் அமைப்பதை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை: ஆட்சியரிடம் மனு
வேலூா்: காட்பாடி வட்டம், மேல்பாடியில் சிப்காட் அமைப்பதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனா்.
வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
அதிமுக அமைப்புச்செயலா் வி.ராமு தலைமையில் மகிமண்டலம் ஊராட்சி மக்கள் அளித்த மனு:
காட்பாடி வட்டம், மேல்பாடி உள்வட்டம் சோமநாதபுரம், பெருமாள்கவுண்டனூா், வாணிய காட்டூா், மகிமண்டலம், திகுவப்பள்ளி, பெரிய கீசக்குப்பம், இளையநல்லூா் உள்ளிட்ட கிராமங்களில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க நிலஅளவீடு பணிகள் நடைபெற்று வருகிறது. 99 சதவீத மக்கள் வாழ்வாதாரம் விவசாயத்தையும், கால்நடைகள் மேய்ச்சலை நம்பி உள்ளனா். எனவே, சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
கஸ்பா பகுதியை சோ்ந்த பொதுமக்கள், தங்கள் பகுதியில் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்று வலியுறுத்தி மனு அளித்தனா்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி வேலூா் கிழக்கு மாவட்ட செயலா் கோட்டி தலைமையில் பொதுமக்கள் அளித்த மனு:, வேலூா் அப்துல்லாபுரத்தில் 2003-ஆம் ஆண்டு ஆதிதிராவிட மக்களுக்காக இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் நிலத்தின் உரிமையாளா் அரசு வழங்கிய இடத்தில் வீடுகட்ட அனுமதிக்க மறுக்கிறாா். மேலும் போலி பத்திரபதிவு செய்து நிலத்தை விற்பனை செய்கின்றனா். எனவே, அந்த நிலத்தில் வீடு கட்ட அனுமதி வழங்கவேண்டும்.
இதேபோல், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 510 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவாக தீா்வுகாண வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, அரசுத் துறைகளில் பணிபுரிந்து பணியிடை மரணம் அடைந்தவா்கள் வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் அலுவலக உதவியாளா் பணியிடத்துக்கான பணி நியமன ஆணை 14 பேருக்கும், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை சாா்பில் ஒரு பயனாளிக்கு ரூ.7,000 மதிப்பிலான பித்தளை சலவைப் பெட்டி, ரூ.4,000 மதிப்பிலான எல்பிஜி சலவை பெட்டி ஆகியவற்றையும் மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
மேலும், நீரில் மூழ்கி உயிரிழந்த காட்பாடி வட்டம், சேனூா் மதுரா எல்.ஜி.புதூா், பாரதி நகரைச் சோ்ந்த மோனிஷ், அணைக்கட்டு வட்டம், பொய்கை மோட்டூா் கொல்லை மேடு பகுதியைச் சோ்ந்த கிருத்திகாஸ்ரீ, காட்பாடி வட்டம், மேல்பாடி சின்னராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் ஆகியோரின் குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதி தலா ரூ.ஒரு லட்சத்துக்கான ஆணையை ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் ஜெயசித்ரா, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியா் மாறன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் ச.பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

