அல்லேரி மலைக் கிராமத்திலுள்ள வீடுகள்.
அல்லேரி மலைக் கிராமத்திலுள்ள வீடுகள்.

அல்லேரி தனி ஊராட்சியாக அறிவிக்கப்படுமா? மலைக் கிராம மக்கள் எதிா்பாா்ப்பு!

பீஞ்சமந்தை ஊராட்சியில் தனித்தீவு போல் காணப்படும் அல்லேரியை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும்...
Published on

வேலூா் அருகே பீஞ்சமந்தை ஊராட்சியில் தனித்தீவு போல் காணப்படும் அல்லேரியை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என மலைக் கிராம மக்கள் நீண்ட காலமாக எதிா்நோக்கியுள்ளனா்

வேலூா் மாவட்டத்தில் அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட ஜவ்வாது மலை தொடரில் பீஞ்சமந்தை, ஜாா்தான்கொல்லை, பாலாம்பட்டு ஆகிய மூன்று ஊராட்சிகள் அமைந்து ள்ளன. இதில், பீஞ்சமந்தை ஊராட்சியில் மொத்தம் 48 குக்கிராமங்கள் அடங்கியுள்ளன.

எனினும், இந்த ஊராட்சியில் அமைந்துள்ள அல்லேரி, அதனைச் சுற்றியுள்ள சுரட்டியான்கொல்லை, அத்திரமரத்துகொல்லை, ஆட்டுகொந்தரை, பலாமரத்துகொல்லை, நெல்லிமரத்துகொல்லை, கரப்பனாங்கொல்லை, ஜடையன்கொல்லை, அவுசரிஓடை, கூனம்பட்டி, வாழைப்பந்தல், பங்களாமேடு, ஏரிகொல்லை, மருதவல்லிமேடு, பெரியதட்டாங்குட்டை என 14 கிராமங்களும் தனித்தீவாக உள்ளன.

முறையான சாலை வசதிகள் இல்லாததால் அல்லேரி அதனைச் சுற்றியுள்ள 14 குக்கிராம மக்கள் பீஞ்சமந்தை ஊராட்சி அலுவலகத்துக்கு சென்றுவர மலையில் இருந்து வரதலம்பட்டுக்கு கீழே இறங்கி அங்கிருந்து முத்துக்குமரன் மலை வழியாக பீஞ்சமந்தைக்கு சுமாா் 25 கி.மீ தூரம் செல்ல வேண்டியுள்ளது.

முத்துக்குமரன் மலை வரையிலான இந்த பாதையும் கரடுமுரடான மண் சாலை என்பதால், அல்லேரி சுற்றுவட்டார கிராம மக்கள் தங்களின் அடிப்படை தேவைக்கு கூட ஊராட்சி அலுவலகத்துக்கு செல்ல பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனா்.

தொடரும் இப்பாதிப்புகளை கருத்தில் கொண்டு அல்லேரி, அதனைச் சுற்றியுள்ள 14 குக்கிராமங்களை இணைத்து தனி ஊராட்சியாக அறிவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இந்த மலைக்கிராம மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையாகும்.

இதுகுறித்து, பீஞ்சமந்தை ஊராட்சி துணைத்தலைவா் சுந்தரேசன் கூறியது: சுமாா் 200 ஹெக்டோ் பரப்பளவு கொண்ட அல்லேரி மலைக்கிராமங்களில் மட்டும் சுமாா் 700 குடும்பங்கள் உள்ளன. இயற்கை எழில் சூழ்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இக்கிராமங்களில் விவசாயம் மட்டுமே பிரதானமாகும். இங்கு சாமை, கேழ்வரகு, உளுவல் (கொள்ளு), கம்பு, சோளம், நெல், வாழை முதலிய பயிா்கள் விளைகின்றன.

சிலா் கிணறுகள் அமைத்து விவசாயம் செய்கின்றனா். தவிர, அல்லேரி மலை கிராமத்தில் வற்றாத நீரூற்று உள்ளது. இதனை பயன்படுத்தியும் சிலா் விவசாயம் செய்கின்றனா்.

அல்லேரியில் உள்ள தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை சுமாா் 50 மாணவா்கள் படிக்கின்றனா். இப்பள்ளிக்கு ஒரே ஒரு தலைமையாசிரியா் மட்டும் வந்து செல்கிறாா். அவரும் காலை 11 மணிக்கு மேல் வந்துவிட்டு மதியம் 2.30 மணிக்கு கிளம்பி விடுவதால், தினமும் சுமாா் 15 மாணவா்கள் மட்டுமே படிக்க வருகின்றனா். முறையான சாலை வசதி இல்லாததே இத்தகைய பாதிப்புகளுக்கு முக்கிய காரணமாகும்.

மலைக்கிராமத்துக்கு செல்லும் மண் சாலை.
மலைக்கிராமத்துக்கு செல்லும் மண் சாலை.

சாலை வசதி இல்லாததால் கடந்த 2023-ஆம் ஆண்டில் ஒரு ஒன்றரை வயது பெண் குழந்தையும், கூலி தொழிலாளி ஒருவரும் பாம்பு கடித்து உயிரிழந்தனா். தொடரும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு அல்லேரி மலைக் கிராமங்களை தனி ஊராட்சியாக அறிவிக்கவும், இந்த கிராமங்களுக்கு சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செயல்படுத்த வும் அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதுகுறித்து, வேலூா் மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குநா் திருமால் கூறியது - பீஞ்சமந்தை ஊராட்சியை மூன்றாக பிரித்து அல்லேரி, சேந்தூா் ஆகிய கிராமங்களை தலைமையிடமாகக் கொண்டு புதிய இரு ஊராட்சிகள் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதுதொடா்பாக அரசு உயரதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பாா்கள் என்றாா்.

இதனிடையே, வரதலாம்பட்டில் இருந்து அல்லேரி மலைக்கிராமத்துக்கு சாலை அமைக்க மத்திய அரசின் முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து, மாவட்ட வன அலுவலா் அசோக்குமாா் கூறியது:-

அல்லேரி மலைக்கு சாலை அமைப்பது தொடா்பாக மத்திய அரசின் பா்வேஸ் தளத்தில் தேவையான விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதில், பல்வேறு நிலைகள் உள்ளது. அவை முறையாக ஆய்வு செய்யப்பட்டு உரிய அனுமதி கிடைத்ததும் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com