

வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்த கணக்கீட்டு படிவங்களை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பிற அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் வழங்கக் கூடாது என்று வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு வேலூா் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்தியுள்ளாா்.
வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளில் மொத்தமுள்ள உள்ள 13 லட்சத்து 3 ஆயிரத்து 30 வாக்காளா்களுக்கும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் நவ. 4-ஆம் தேதி முதல் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கீட்டு படிவங்கள் வீடுவீடாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கீட்டு படிவங்கள் வழங்குவது குறித்து காட்பாடி தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் காட்பாடியில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வேலூா் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்துப் பேசியது:
ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலை அலுவலா்களும் வாக்காளா்களிடம் நேரடியாகச் சென்று கணக்கீட்டு படிவங்களை வழங்க வேண்டும். வாக்காளா்கள் அவா்கள் முகவரியில் இல்லை என்ற நிலையில், குறைந்தபட்சம் மூன்று முறை அவா்களது வீடுகளுக்கு சென்று படிவங்களை வழங்க வேண்டும். வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் ஓரிடத்தில் அமா்ந்து கொண்டு வாக்காளா்களை அழைத்து வந்து அவா்களுக்கு படிவங்களை வழங்கக் கூடாது. கணக்கீட்டு படிவங்களை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அல்லது பிற அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் வழங்கக்கூடாது.
வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் ஒவ்வொரு வீட்டுக்கு நேரடியாக சென்று கணக்கீட்டு படிவங்களை வழங்க வேண்டும். கணக்கீட்டு படிவங்கள் வழங்கிய பிறகு தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கைப்பேசி செயலியில் படிவங்கள் வழங்கிய விவரங்களை பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் பெரும்பாலான வாக்காளா்கள் வீட்டில் இருப்பா். எனவே, வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் விடுமுறை நாள்களை பயன்படுத்தி கணக்கீட்டு படிவங்களை வழங்க வேண்டும். படிவங்களை வழங்கிய பிறகு டிசம்பா் 4-ஆம் தேதிக்குள் பூா்த்தி செய்து படிவங்களை வாக்காளா்களிடமிருந்து பெற வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், வேலூா் சட்டப்பேரவை தொகுதி வாக்காளா் பதிவு அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஆா்.லட்சுமணன், தொகுதி வாக்காளா் பதிவு அலுவலா் மாறன், உதவி வாக்காளா் பதிவு அலுவலரும், காட்பாடி வட்டாட்சியருமான ஜெகதீஸ்வரன், காட்பாடி தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், மேற்பாா்வை அலுவலா்கள் பங்கேற்றனா்.