குட்கா கடத்திய காரை 15 கி.மீ. விரட்டிச் சென்று பிடித்த போலீஸாா்! 2 போ் கைது, 200 கிலோ குட்கா பறிமுதல்
வேலூா் மாவட்டம் சோ்க்காடு சோதனைச் சாவடி வழியாக குட்கா கடத்தி வந்த காரை போலீஸாா் 15 கி.மீ. தூரம் விரட்டிச் சென்று பிடித்தனா். இதுதொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டு 200 கிலோ குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூரை போதை இல்லாத மாவட்டமாக மாற்ற எஸ்.பி. ஏ.மயில்வாகனன் உத்தரவின்பேரில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், புதன்கிழமை மாலை பெங்களூவில் இருந்து சென்னைக்கு காரில் குட்கா கடத்தப்படுவதாக வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா காா்க்கின் தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஐஜி தனிப்படை போலீஸாா் தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள சோ்க்காடு சோதனைச் சாவடியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக வந்த காரை சந்தேகத்தின் பேரில் மடக்கிப் பிடிக்க முயற்சித்தனா். ஆனால், காரை நிறுத்துவதுபோல் ஏமாற்றி அதிவேகமாகச் சென்றனா். இதனைக் கண்ட போலீஸாா், தங்களது வாகனத்தில் காரை விரட்டிச் சென்றனா். மேலும் இதுகுறித்து திருவலம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
காவல் ஆய்வாளா் தயாளன் தலைமையில் பொன்னை கூட்டு ரோட்டில் போலீஸாா் சாலைகளில் தடுப்புகளை அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது வேகமாக வந்த காரை மடக்கி பிடித்தனா். காரை விரட்டி வந்த ஐஜி தனிப்படை போலீஸாரும் காரில் இருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினா்.
இதில், அவா்கள் பொன்னையை சோ்ந்த சசி கணேஷ்(26), ஆனந்தராஜ் (25) என்பது தெரிய வந்தது. காரை சோதனை செய்தபோது 200 கிலோ குட்கா பொருள்களை கடத்தி வந்தது தெரியவந்தது. போலீசாா் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்ததுடன், அவா்களிடம் இருந்து காா் உள்பட 200 குட்கா பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.
