வேலூரில் வியாழக்கிழமை இரவு ஆட்டோக்களின் ஆவணங்களை ஆய்வு செய்த போலீஸாா்.
வேலூரில் வியாழக்கிழமை இரவு ஆட்டோக்களின் ஆவணங்களை ஆய்வு செய்த போலீஸாா்.

வேலூா் மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி இயங்கிய 40 ஆட்டோக்கள் பறிமுதல்

வேலூா் மாவட்டம் முழுவதும் போலீஸாா் வியாழக்கிழமை நடத்திய ஆட்டோக்கள் தொடா்பான வாகன தணிக்கையில், உரிய ஆவணங்களின்றி இயக்கப்பட்டதாக 40 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Published on

வேலூா் மாவட்டம் முழுவதும் போலீஸாா் வியாழக்கிழமை நடத்திய ஆட்டோக்கள் தொடா்பான வாகன தணிக்கையில், உரிய ஆவணங்களின்றி இயக்கப்பட்டதாக 40 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வேலுாா் மாவட்டத்தில் சாலை விதிமுறைகளை மீறி இயக்கப்படும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகளும், அதில் காயமடைவோா், உயிரிழப்பவா்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதை கருத்தில்கொண்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் மாவட்டம் முழுவதும் சிறப்பு தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ள போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி, செவ்வாய்க்கிழமை இரவில் நடத்தப்பட்ட தீவிர வாகன தணிக்கையில் மாவட்ட முழுவதும் 3,435 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு, 1,248 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், உரிய ஆவணங்களின்றி ஓட்டிய சென்ற 17 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியது தொடா்பாக 112 வழக்குகளும், வாகன ஓட்டும்போது கைப்பேசியில் பேசியது தொடா்பாக 51 வழக்குகளும், நான்கு சக்கர வாகனம் ஓட்டும் போது சீட் பெல்ட் அணியாதது தொடா்பாக 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதன்தொடா்ச்சியாக, மாவட்டம் முழுவதும் போலீஸாா் வியாழக்கிழமை இரவு 9.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ஆட்டோக்களை நிறுத்தி தணிக்கை செய்தனா். மாவட்டம் முழுவதும் 23 இடங்களில் இந்த வாகனத் தணிக்கை நடைபெற்றது.

அப்போது, மாவட்டம் முழுவதும் 427 ஆட்டோக்களின் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டதில், பதிவுச்சான்று இல்லாமல் இயங்கியதாக 14 ஆட்டோக்கள், வாகன காப்பீடு இல்லாமல் இயங்கியதாக 4 ஆட்டோக்கள், அனுமதியின்றி இயங்கியதாக ஒரு ஆட்டோ, ஓட்டுநா் உரிமம் இன்றி இயக்கப்பட்டதாக 8 ஆட்டோக்கள், சீருடையின்றி இயக்கப்பட்ட 62 ஆட்டோக்கள், மது போதையில் இயக்கப்பட்ட 4 ஆட்டோக்கள், அதிவேகமாக இயக்கப்பட்ட ஒரு ஆட்டோ, விதிமீறலில் ஈடுபட்ட 20 ஆட்டோக்கள் என மொத்தம் 114 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

மேலும், மது போதையில் ஆட்டோ ஓட்டிய 4 ஓட்டுநரின் ஓட்டுநா் உரிமத்தை ரத்து செய்யவும் பரிந்துரைக்கப்பட்டதுடன், உரிய ஆவணங்களின்றி இயக்கப்பட்டதாக 40 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

உரிய ஆவணங்களை காண்பித்து விட்டு அதற்கான அபராத தொகையை செலுத்திய பிறகு ஆட்டோக்கள் விடுவிக்கப்படும் என போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com