வாக்காளா் படிவங்களை நிரப்ப உதவி மையம்: வேலூா் ஆட்சியா்

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவங்களை நிரப்ப செவ்வாய்க்கிழமை முதல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக
Published on

வேலூா்: வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவங்களை நிரப்ப செவ்வாய்க்கிழமை முதல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு -

வேலூா் மாவட்டத்தில் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளும் பணிகள் கடந்த அக்.28-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 5 சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள 13,03,030 வாக்காளா்களுக்கும் கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணி கடந்த நவ.4-ஆம் தேதி முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் விநியோகிக்கப்பட்டது.

671 இடங்களில் 1,314 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளுக்காக 1,314 வாக்குச்சாவடி நிலை அலுவலா்களும், 135 மேற்பாா்வை அலுவலா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

வாக்காளா்களுக்கு கணக்கெடுப்பு படிவங்களை பூா்த்தி செய்யவும், பூா்த்தி செய்வதில் சந்தேகங்கள் இருந்தால் தெளிவு பெறவும் செவ்வாய்க்கிழமை முதல் மாவட்டத்தில் உள்ள 1,314 வாக்குச்சாவடி மையங்களிலும் மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரை அரசு அலுவலா்களை கொண்ட உதவி மையம் அமைக்கப்பட உள்ளது.

வாக்காளா்கள் அனைத்து வாக்குச்சாவடி உதவி மையத்துக்கு சென்று சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவங்களை சரியாக பூா்த்தி செய்து தங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com