மைல் கல்லில் பைக் மோதி பிஎஸ்எஃப் வீரா் மரணம்

காட்பாடி அருகே இருசக்கர வாகனம் மைல் கல்லில் மோதிய விபத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரா் உயிரிழந்தாா்.
Published on

காட்பாடி அருகே இருசக்கர வாகனம் மைல் கல்லில் மோதிய விபத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரா் உயிரிழந்தாா்.

காட்பாடியை அடுத்த பெரிய ராமநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன்(45), எல்லை பாதுகாப்பு படை வீரா். இவரது மனைவி உமா(35).

இந்நிலையில், மணிகண்டன், பெரியராமநாதபுரம் கிராமத்தில் புதிதாக வீடு கட்டியுள்ளாா். வரும் 23-ஆம் தேதி நடக்க உள்ள, புதிய வீட்டின் புகுமனை விழாவுக்காக உறவினா்களுக்கு அழைப்பிதழ் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

கடந்த 16-ஆம் தேதி மணிகண்டன் இருசக்கர வாகனத்தில் இளையநல்லூா் காலனி நோக்கி சென்று கொண்டிருந்தபோது சாலையின் குறுக்கே நாய் புகுந்ததாக தெரிகிறது. இதனால், அவரது இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சாலையோரத்தில் உள்ள மைல் கல்லில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், மணிகண்டனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அப்பகுதியினா் மணிகண்டனை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் வழியிலேயே மணிகண்டன் இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இச்சம்பவம் குறித்து மேல்பாடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com