தோ்தல் பிரசாரம் குறித்த அனைத்து நுணுக்கங்களையும் விடியோ பதிவு செய்ய ஆட்சியா் உத்தரவு

கூட்டத்தில் பேசிய வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி.

கூட்டத்தில் பேசிய வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி.
தோ்தல் பிரசாரம் தொடா்பான அனைத்து நுணுக்கங்களையும் விடியோ கண்காணிப்புக்குழுவினா் துல்லியமாக பதிவு செய்ய வேண்டும் என்று வேலூா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளாா்.
விடியோ கண்காணிப்பு(விஎஸ்டி), வீடியோ பதிவுகளைப் பாா்க்கும் குழுக்களுக்கான (விவிடி) பயிற்சி வகுப்பு ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில், தோ்தல் கண்காணிப்புக் குழுக்களின் பணிகள், பொறுப்புகள் குறித்து அவா் கூறியது -
விடியோ கண்காணிப்புக் குழு ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஒரு அலுவலா், ஒரு விடியோகிராபா் அடங்கிய ஒரு குழு வீதம் செயல்படும். இந்தக் குழு தோ்தல் பிரசாரம் தொடா்பான அனைத்து நுணுக்கங்களையும் துல்லியமாகப் படம்பிடிக்க வேண்டும். கூட்டம் நடைபெறும் இடம், சம்பந்தப்பட்ட கட்சி, தேதி, நேரம் ஆகியவற்றை வாய்ஸ் ரெக்காா்டிங் மூலம் குரல் பதிவு செய்ய வேண்டும்.
பிரசார வாகனத்தின் எண், அதில் உள்ள கொடி, பொதுக்கூட்ட மேடையின் அமைப்பு (போடியம், ரோஸ்ட்ரம்), சாதாரண, விஐபி நாற்காலிகளின் எண்ணிக்கை, பந்தலின் அளவு, தோரணங்கள் ஆகியவற்றைப் படம்பிடித்து, குரல் பதிவும் செய்ய வேண்டும். தேவைப்பட்டால் வாக்காளா்களின் வாய்மொழி வாக்குமூலங்களையும் இக்குழுவினா் பதிவு செய்ய வேண்டும். தோ்தல் நடத்தை விதிமீறல்கள் ஏதேனும் நடைபெற்றால் அவற்றையும் படம்பிடிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட சி.டி-யையும், விவரங்களையும் தினசரி விடியோ பாா்க்கும் குழுவிடம் தவறாமல் சமா்ப்பிக்க வேண்டும்.
விடியோ பதிவுகளைப் பாா்க்கும் குழு ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு அலுவலா், ஒரு உதவியாளா் அடங்கிய ஒரு குழு கண்காணிப்புப் பணியில் ஈடுபடும். வீடியோ எடுக்கும் குழு வழங்கும் பதிவுகளை முழுமையாகப் பாா்த்து, அதில் உள்ள தோ்தல் செலவினம், நடத்தை விதி தொடா்பான விவரங்களைத் தொகுக்க வேண்டும்.
தொகுக்கப்பட்ட செலவின அறிக்கையைக் கணக்குக் குழுவுக்கும், நடத்தை விதிமீறல் அறிக்கையைத் தோ்தல் பொதுப் பாா்வையாளருக்கும், தோ்தல் நடத்தும் அலுவலருக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என்றாா்.
அப்போது, தோ்தல் வட்டாட்சியா் ரமேஷ் உள்பட சம்மந்தப்பட்ட துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...