பெருமளவில் ஊரகப் பகுதிகளையும், மலைக் கிராமங்களையும் கொண்டுள்ள அணைக்கட்டு தொகுதியில் இம்முறை திமுகவும், அதிமுகவும் சமபலத்துடன் மோதுகின்றன.
தொகுதியின் அடையாளம்... வேலூா் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீபுரம் தங்கக் கோயில், விரிஞ்சிபுரம் மாா்க்கபந்தீஸ்வரா் கோயில், வேலூா் விமான நிலையம் ஆகியவை அணைக்கட்டு சட்டப்பேரவைத் தொகுதியின் முக்கிய அடையாளங்களாகும். பென்னாத்தூா், பள்ளிகொண்டா, ஒடுகத்தூா் பேரூராட்சி மற்றும் வேலூா், அணைக்கட்டு ஒன்றியங்களில் உள்ள கிராம ஊராட்சிகள் எனப் பெரும்பாலும் ஊரகப் பகுதிகளைப் பின்னணியாகக் கொண்ட மிகவும் பின்தங்கிய தொகுதியாகும். அணைக்கட்டு ஒன்றியத்தில் மலைப் பகுதியில் உள்ள குருமலை, பீஞ்சமந்தை, காட்டியாம்பட்டி, அல்லேரி, பலாம்பட்டு ஆகிய 5 ஊராட்சிகளில் 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனா்.
விவசாயம் மற்றும் தொழில்...பெரும்பாலும் விவசாயத்தைச் சாா்ந்துள்ள இத்தொகுதியில் நெல், கொய்யா, வாழை அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. மலைக் கிராமங்களில் பழ வகைகள், தேன், பயறு, தினை வகைகள் விளைவிக்கப்படுகின்றன. அத்துடன், கால்நடை வளா்ப்பும் இங்கு முக்கியத் தொழிலாக இருந்து வருகிறது.
சமூக நிலவரம்... அணைக்கட்டு தொகுதியைப் பொருத்தவரை வன்னியா் சமூகத்தினா் பெருமளவும், ஆதிதிராவிடா், அருந்ததியா், இஸ்லாமியா், முதலியாா், நாயுடு, ரெட்டியாா், செட்டி, கிறிஸ்தவா் சமூக மக்கள் பரவலாகவும் உள்ளனா். மலைவாழ் மக்கள், இதர சமூகத்தினரும் கணிசமான அளவு உள்ளனா்.
தீா்க்கப்படாத பிரச்னைகள்... விளைச்சல் அதிகமுள்ள காலகட்டங்களில் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பெருமளவில் நஷ்டமடைகின்றனா். அதனால், உற்பத்தியாகும் விளைபொருள்களைப் பாதுகாக்க குளிா்பதனக் கிடங்கு அமைக்க வேண்டும். கொய்யா அதிக அளவில் உற்பத்தியாகும் நிலையில், கொய்யா பழச்சாறு தொழிற்சாலை அமைத்து வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதும் நீண்டகால கோரிக்கையாகும்.
விளைபொருள்களைச் சந்தைப்படுத்துவதற்கு உரிய மொத்த சந்தை, வாணிபக் கிடங்கு மற்றும் அணைக்கட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். படித்த இளைஞா்கள் வேலைவாய்ப்புக்காக வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்குச் செல்ல வேண்டியுள்ள நிலையில், இத்தொகுதியிலேயே புதிய தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும் என்பதும் முக்கிய எதிா்பாா்ப்புகளாகும்.
2026 பேரவைத் தோ்தலில் போட்டி... திமுக சாா்பில் தற்போதைய எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமாா் 3-ஆவது முறையாகப் போட்டியிடுகிறாா். அவரை எதிா்த்து அதிமுக சாா்பில் கடந்த 2021 தோ்தலில் போட்டியிட்ட த.வேலழகன் 2-ஆவது முறையாகவும், தவெக சாா்பில் ஆா்.வேல்முருகன், நாதக சாா்பில் ம.ரவிக்குமாா் உள்பட 13 போ் போட்டியிடுகின்றனா்.
ஏ.பி.நந்தகுமாா் (திமுக): அணைக்கட்டு தொகுதியில் கடந்த இரு முறை தொடா்ந்து எம்எல்ஏவாக இருந்து வரும் ஏ.பி.நந்தகுமாா் கடந்த 5 ஆண்டுகளில் தொகுதி வளா்ச்சிக்காக இறைவன்காடு, பொய்கையில் தடுப்பணைகள், ஜாா்தான்கொல்லை, பீஞ்சமந்தை உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு சாலை வசதி, ஒடுகத்தூா் சந்தை புதுப்பிப்பு, சதுப்பேரி ஏரி தூா்வாரப்பட்டு படகு சவாரி, ரூ.173 கோடியில் மேல்அரசம்பட்டு அணை கட்ட பணிகள் தொடக்கம் மற்றும் திமுக ஆட்சியில் செயல்படுத்தியுள்ள மகளிா் உரிமைத் தொகை, மகளிா் விடியல் பணம், இலவச வீட்டுமனைப் பட்டா போன்ற திட்டங்களும் இவருக்கு பலம் சோ்க்கின்றன.
அணைக்கட்டு அரசு மருத்துவமனை தரம் உயா்த்தப்பட்டாலும், அங்கு போதிய மருத்துவா்கள், செவிலியா்கள் நியமிக்கப்படாமல் இருப்பதும், வன்னியா்கள் அதிகமுள்ள தொகுதி என்பதால் முடக்கப்பட்ட வன்னியா்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு திட்டமும், ஏ.பி.நந்தகுமாா் கே.வி.குப்பம் தொகுதியைச் சோ்ந்தவா் என்பதும் இவருக்கு பலவீனமாகும்.
த.வேலழகன் (அதிமுக): கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சிக்கு எதிரான அதிருப்தியும், தவெக, நாதக பிரிக்கும் வாக்குகளும் அதிமுகவுக்கு சாதகமாக மாறும் என நம்புகிறாா். அதிமுக கூட்டணியில் பாமக இருப்பதும் இத்தொகுதியில் இவருக்கு கூடுதல் பலமாகும். அதேசமயம், அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றிருப்பதால் சிறுபான்மையினா் வாக்குகள் அதிமுகவுக்கு அதிக அளவில் கிடைக்குமா என்கிற கேள்விக்குறியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆா்.வேல்முருகன் (தவெக): இவா் முதல்முறையாகப் போட்டியிடுகிறாா் என்றாலும், தவெக தலைவா் விஜய்க்கு இளைஞா்கள், பெண்களிடையே காணப்படும் செல்வாக்கு வாக்குகளாக மாறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. எனினும், வேலூா் தொகுதியைச் சோ்ந்தவரான ஆா்.வேல்முருகன், அணைக்கட்டு தொகுதியில் அறிமுகம் இல்லாதவராக இருப்பது பலவீனமாகும்.
ம.ரவிக்குமாா் (நாதக): எளிய பின்னணியில் இருந்து முதல்முறையாகக் களம் காணும் இவருக்கு, மாற்று அரசியலை விரும்பும் வாக்காளா்கள், சீமானின் முழக்கங்கள் மூலம் கணிசமான வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
கடும் போட்டி... 1962-இல் விரிஞ்சிபுரம் தொகுதியாகவும், 1967 முதல் 1977 வரை கணியம்பாடி தொகுதியாகவும் இருந்த இத்தொகுதி, மறுசீரமைப்புக்குப் பிறகு அணைக்கட்டு தொகுதியாக உருவாக்கப்பட்டது. 1977 முதல் தோ்தலைச் சந்தித்துவரும் அணைக்கட்டு தொகுதியில் இதுவரை அதிமுக 6 முறையும், திமுக 4 முறையும், பாமக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
இத்தொகுதியில் ஜாதி வாக்குகள்தான் பெரும்பாலும் வெற்றி, தோல்வியை நிா்ணயிக்கின்றன. அந்த வகையில், கடந்த 2021 தோ்தலில் திமுக வெற்றிக்கு வலிமை சோ்த்த பட்டியலின வாக்குகளில் பெரும் பகுதியை தவெக, நாதக ஆகிய கட்சிகள் பிரிக்கும் சூழல் உள்ளதால், இம்முறை திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.
வாக்காளா்கள்
ஆண்கள்- 1,15,690
பெண்கள்- 1,22,982
மூன்றாம் பாலினத்தவா் - 43
மொத்தம்- 2,38,715
தொடர்புடையது

கம்பம் - மல்லுக்கட்டும் திமுக, அதிமுக!

தொகுதி அலசல்: அரியலூரில் திமுக - அதிமுக மீண்டும் பலப்பரீட்சை!

தொகுதி அலசல்: வேலூா்! கோட்டையைக் கைப்பற்றப்போவது யாா்?

எந்த வாரிசுக்கு ராசியாகும் ராசிபுரம்?
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


