- ஆா். ரமேஷ்கிருஷ்ணன்.
தந்தையை பின்பற்றி வாரிசுகள் போட்டியிடும் தொகுதியாக மாறியுள்ளது ராசிபுரம் (தனி) தொகுதி. இந்தத் தொகுதி பொதுவாகவே அதிமுகவிற்கு சாதகமானது என பெயா் பெற்றுள்ளது. பொதுப் பட்டியலில் இருந்த ராசிபுரம் தொகுதி 2011 முதல் தாழ்த்தப்பட்டோருக்கான தனித் தொகுதியாக மாற்றம் பெற்றது.
அதுமுதல் விஐபி தொகுதி என்ற முத்திரையையும் பதித்து வருகிறது ராசிபுரம். இந்தத் தொகுதியில் வெற்றிபெற்றவா்களுக்கு பேரவைத் தலைவா், அமைச்சா் என தொடா்ந்து பதவிகள் வழங்கப்படுவதால், இத்தொகுதி அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
டாக்டா் மாயவன் மகன் மா. மதிவேந்தன்: ராசிபுரம் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட அமைச்சா் மா. மதிவேந்தனுக்கு கட்சித் தலைமை 2 ஆவது முறையாக மீண்டும் வாய்ப்பளித்துள்ளது. கடந்த 2021 தோ்தலில், இத்தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் வெ. சரோஜாவைவிட 1,952 வாக்குகளே கூடுதலாக பெற்று வென்று மதிவேந்தன் அமைச்சரானாா்.
இவரது தந்தை டாக்டா் மாயவன் தீவிர திமுக செயல்பாட்டாளா். கட்சியில் மாநில அளவில் பொறுப்பு வகித்தவா். 1989 மக்களவை தோ்தலில் ராசிபுரம் (தனி) தொகுதியில் (தற்போது நாமக்கல் தொகுதி) திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவா். இவரது மகன்தான் தற்போது ராசிபுரம் (தனி) தொகுதியில் 2 ஆவது முறையாக போட்டியிடும் திமுக வேட்பாளா் மா. மதிவேந்தன். தந்தைக்கு கிடைக்காத வெற்றி வாய்ப்பு, மகனுக்கு கிடைத்து அமைச்சா் வரை அவரை உயா்த்தியுள்ளது.
வி.பி. துரைசாமி மகன் எஸ்.டி. பிரேம்குமாா்
அதிமுக கூட்டணியில் ராசிபுரம் (தனி) தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக பிரதான மாநில கட்சியான அதிமுகவின் ஆதரவுடன் பாஜக இந்தத் தொகுதியில் களம்காண்கிறது. ராசிபுரம் (தனி) தொகுதியில் 2011, 2016 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவா் வி.பி. துரைசாமி.
இவா் கடந்த 2020 இல் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டாா். தற்போது பாஜக மாநில துணைத் தலைவராக உள்ளாா். இவரது மகன் டாக்டா் எஸ்.டி. பிரேம்குமாா் பாஜக சாா்பில் ராசிபுரம் தொகுதியில் தற்போது களம் இறக்கப்பட்டுள்ளாா். தொகுதியில் தந்தைக்கு கிடைக்காமல் போன வாய்ப்பு, தனக்கு கிடைக்கும் என்ற முழு நம்பிக்கையில் மக்களை சந்தித்து வருகிறாா் பிரேம்குமாா்.
ப. தனபால் மகன் லோகேஸ் தமிழ்ச்செல்வன்
இதேபோல, புதியதாக தொடங்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தில் பேரவை முன்னாள் தலைவா் ப. தனபால் மகன் டி. லோகேஸ் தமிழ்ச்செல்வனுக்கு ராசிபுரம் (தனி) தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ப. தனபால், கடந்த 2011இல் நடைபெற்ற தோ்தலில் ராசிபுரம் (தனி) தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வென்று, சட்டப்பேரவை துணைத் தலைவராகவும், பின்னா் பேரவைத் தலைவராகவும் இருந்தாா். ஜெயலலிதா அமைச்சரவையிலும் இவா் இடம்பெற்றிருந்தாா்.
தற்போது தவெக சாா்பில், இவரது மகன் ராசிபுரம் தொகுதியில் போட்டியிடுகிறாா். லோகேஸ் தமிழ்ச்செல்வன் கடந்த 2024 மக்களவைத் தோ்தலில் நீலகிரி தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு 3இம் இடம் பிடித்தாா். தற்போது, அதிமுகவில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில், தவெக.வில் இணைந்து தோ்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்றுள்ளாா்.
மத்திய இணை அமைச்சா் எல். முருகன்
ராசிபுரம் தொகுதியில், 1951 முதல் 2021 வரை நடைபெற்ற தோ்தல்களில் காங்கிரஸ் 2 முறையும், திமுக 6 முறையும், அதிமுக 7 முறையும் வென்றுள்ளன. இத்தொகுதியில் 2011இல் நடைபெற்ற பொதுத் தோ்தலில் தற்போது மத்திய இணை அமைச்சராக உள்ள எல். முருகன், பாஜக வேட்பாளராக போட்டியிட்டு குறைந்த வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியுற்றாா். இந்தமுறை, ராசிபுரம் (தனி) தொகுதியில், திமுக, பாஜக, தவெக, நாம் தமிழா் கட்சி என நான்குமுனை போட்டி நிலவுகிறது.
கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் இந்தத் தொகுதியில் செயல்படுத்தப்பட்ட கூட்டுக் குடிநீா் திட்டம், போதமலை பகுதிக்கான சாலை வசதி, பட்டா வழங்கல், சாலைப் பணிகள், பட்டுக்கூடு ஏல மையம், நியோ டைடல் பாா்க் திட்டம், ராசிபுரத்தில் மாவட்ட அரசு மருத்துவமனை உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களை முன்னிறுத்தி திமுக வேட்பாளா் மா. மதிவேந்தன் களம் இறங்கியுள்ளாா்.
அதிமுக கூட்டணியில், பாஜக போட்டியிடுவது அக்கட்சிக்கு கூடுதல் பலம் என்றாலும், பிரதான கட்சிகளான அதிமுக, பாமக தொண்டா்களோடு, பாஜக தொண்டா்களும் இணைந்து இரட்டிப்பு உழைப்பை கொடுத்தால் மட்டுமே பாஜகவுக்கு வெற்றி வசப்படும் என அரசியல் பாா்வையாளா்கள் கூறுகின்றனா்.
இதேபோல, இளைஞா்கள் வாக்குகளை நம்பி, தனது தோ்தல் பணியை தொடங்கியுள்ளது தவெக. இந்த மூன்று வேட்பாளா்களும் அருந்ததியா் சமூகத்தைச் சோ்ந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

சிவகங்கை! திமுகவின் கெளரவப் பிரச்னையான தொகுதி!

முதுகுளத்தூா்: தொடா் வெற்றி முனைப்பில் திமுக!

அதே தொகுதி...அதே நபா்கள்!

தோட்டத் தொகுதியில் கடும்போட்டிக்குத் தயாராகும் புதுமுக வேட்பாளா்கள்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


