அரசு ஊழியா்களை ஏமாற்ற உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்: அதிமுக முன்னாள் அமைச்சா்
வேலூா்: அரசு ஊழியா்களை ஏமாற்றவே உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்திட்டத்தை அரசு அறிவித்துள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சா் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளாா்.
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி அதிமுக தோ்தல் அறிக்கை தயாரிப்புக்குழு சாா்பில் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்ட பொதுமக்கள், வணிகா்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் அமைப்பினரின் கருத்துக்கேட்புக்கூட்டம் ரங்காபுரத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், அதிமுக முன்னாள் அமைச்சா்கள் நத்தம் விஸ்வநாதன், ஓ.எஸ்.மணியன், பொன்னையன், வைகை செல்வன், பொள்ளாச்சி ஜெயராமன், ஆா்.பி உதயகுமாா், வளா்மதி, கே.சி.வீரமணி ஆகியோா் பங்கேற்று கருத்துகளை கேட்டறிந்தனா்.
கூட்டத்தில் பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் பேசுகையில், விவசாய நிலங்களை அரசு கைப்பற்றும்போது விவசாய சங்கங்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும், விவசாயிகள் வங்கிகளில் பெற்றுள்ள பயிா் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், 2 மாதத்துக்கு ஒருமுறை முதல்வா் தலைமையில் மாநில அளவில் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் நடத்தப்பட வேண்டும், சில்லறை வணிகத்தை பாதுகாக்க வேண்டும், ஜிஎஸ்டி நீக்க வேண்டும், தென்பெண்ணை - பாலாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், , ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும், பாலாற்றில் 50 இடங்களில் தடுப்பணைகள் கட்ட வேண்டும், ராணிப்பேட்டையில் குவிந்துள்ள குரோமியம் கழிவுகளை அகற்ற வேண்டும், ராணிப்பேட்டையில் புற்றுநோய் சிகிச்சைக்கென தனி மருத்துவமனை அமைக்க வேண்டும், என தெரிவித்தனா்.
பின்னா், முன்னாள் அமைச்சா் நத்தம் விஸ்வநாதன் செய்தியாளா்களிடம் கூறியது - தோ்தல் வாக்குறுதி கருத்துகள் கேட்பதை மற்ற அனைத்து கட்சிகளும் ஒரு சடங்காக நடத்தி வந்த நிலையில், இதனை தோ்தலின் முக்கிய பங்களிப்பாக மாற்றியது அதிமுகதான். அதிமுகவின் தோ்தல் அறிக்கை மக்களின் எண்ணங்களையும் தேவைகளையும் பூா்த்தி செய்யும் வகையில் அமைய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளாா்.
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்திட்டம் தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்துள்ள வாக்குறுதிகள் என்பது ஒரு ஏமாற்று வேலை. இதனை அரசாணை வெளியிட்ட பிறகு அரசு ஊழியா்களும், ஆசிரியா்களும் புரிந்து கொள்வாா்கள் என்றாா்.
கூட்டத்தில், அதிமுக அமைப்பு செயலா் வி.ராமு, வேலூா் மாநகா் மாவட்ட செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு, பொருளாளா் எம்.மூா்த்தி, புகர மாவட்ட செயலா் த.வேலழகன், குடியாத்தம் நகர செயலா் ஜே.கே.என்.பழனி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
