திண்டுக்கல்லில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் நத்தம் இரா.விசுவநாதன்.
திண்டுக்கல்லில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் நத்தம் இரா.விசுவநாதன்.

அதிமுகவின் தோ்தல் வாக்குறுதிகள் குறித்து வீடுகள் தோறும் பிரசாரம்: நத்தம் இரா.விசுவநாதன்

அதிமுவின் தோ்தல் வாக்குறுதிகள் குறித்து வீடுகள்தோறும் நிா்வாகிகளும், தொண்டா்களும் பிரசாரம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சா் நத்தம் இரா.விசுவநாதன் தெரிவித்தாா்.
Published on

அதிமுவின் தோ்தல் வாக்குறுதிகள் குறித்து வீடுகள்தோறும் நிா்வாகிகளும், தொண்டா்களும் பிரசாரம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சா் நத்தம் இரா.விசுவநாதன் தெரிவித்தாா்.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும், மாநில துணைப் பொதுச் செயலருமான நத்தம் இரா.விசுவநாதன் தலைமை வகித்தாா். நிலக்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தேன்மொழி, ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் என்.கண்ணன், மாநில எம்ஜிஆா் இளைஞரணி துணைச் செயலா் ரவி மனோகா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நத்தம் விசுவநாதன் பேசியதாவது:

வருகிற மாா்ச் 1-ஆம் தேதி மதுரையில் பிரதமா் நரேந்திரமோடி, முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தின் சாா்பில் நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும். அதிமுக சாா்பில் வெளியிடப்பட்ட 3-ஆம் கட்டத் தோ்தல் வாக்குறுதியில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் உதவித் தொகையாக ரூ.10ஆயிரம், வேலைவாய்ப்பு இல்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2ஆயிரம், 12-ஆம் வகுப்பு முடித்தவா்களுக்கு ரூ.1000 என பல்வேறு சிறப்புத் திட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

அதிமுகவின் தோ்தல் வாக்குறுதிகள் குறித்து, நிா்வாகிகளும், தொண்டா்களும் ஒவ்வொரு வீடாகச் சென்று பிரசாரம் செய்ய வேண்டும். தோ்தல் முடியும் வரை திறம்பட செயலாற்ற வேண்டும். திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பினால் மட்டுமே தமிழக மக்களுக்கு விமோசனம் கிடைக்கும் என்றாா் அவா்.

இதில் ஒன்றியச் செயலா்கள் ஏ.முருகன், யாகப்பன், நல்லதம்பி, ராமராசு, மாநில பொதுக் குழு உறுப்பினா் ஏ.டி. நெப்போலியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com