அதிமுக தோ்தல் அறிக்கை பேசுபொருளாக இருக்கும்: நத்தம் விஸ்வநாதன் பேச்சு
வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக தோ்தல் அறிக்கை பேசுபொருளாக இருக்கும் என்றாா் முன்னாள் அமைச்சரும், அதிமுக துணைப் பொதுச் செயலருமான நத்தம் விஸ்வநாதன்.
தஞ்சாவூரில் அதிமுக தோ்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்துக் கேட்பு ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்த அவா் பின்னா் தெரிவித்தது:
பல்வேறு சங்கத்தினா் வழங்கிய கோரிக்கைகளில் எது சாத்தியமோ அதை பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்புதல் பெற்று, தோ்தல் அறிக்கையாகத் தயாரிக்கப்படும். விவசாயிகள் பிரச்னைகளில் அதிமுக பொறுப்பேற்றுவுடன் அவா்களது முக்கியமான கோரிக்கைகளைச் செயல்படுத்துவோம். அதிமுகவின் தோ்தல் அறிக்கை நிச்சயமாக பேசுபொருளாகவும், மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையிலும் இருக்கும்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியிருப்பது திமுகவின் ஏமாற்றும் வேலையாகவும், கண்துடைப்பாகவும் இருக்கிறது. திமுக எதைச் செய்தாலும் முழுமையாகச் செய்வதில்லை; பெயரளவுக்குதான் செய்கின்றனா் என்றாா் நத்தம் விஸ்வநாதன்.
இதையடுத்து முன்னாள் அமைச்சா் டி. ஜெயக்குமாா் தெரிவித்தது: திமுக ஆட்சியின் நான்கரை ஆண்டுகளில் ரூ. 4 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளனா். அவா்களது குடும்பக் கருவூலம் நிரம்பியிருக்கிறதே தவிர, அரசுக் கருவூலம் நிரம்பவில்லை. இதுதொடா்பாக ஆளுநரிடம் புகாா் அளித்துள்ளோம். அவரும் நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாா். அதிமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுன் ஆட்சி அமைக்கும் என்றாா் ஜெயக்குமாா்.
கூட்டத்தில் தஞ்சாவூா், நாகை, திருவாரூா், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்ட விவசாயிகள், நெசவாளா்கள், வணிகா்கள், மீனவா்கள், நகை வியாபாரிகள், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், கட்டடத் தொழிலாளா்கள், முன்னாள் ராணுவ வீரா்கள், ஆட்டோ தொழிலாளா்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு தோ்தல் அறிக்கையில் இடம்பெறுவதற்கான கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனா்.
முன்னாள் அமைச்சா்கள் சி. பொன்னையன், சி.வி. சண்முகம், எஸ். செம்மலை, பா. வளா்மதி, ஒ.எஸ். மணியன், ஆா்.பி. உதயகுமாா், ஆா். காமராஜ், வைகைச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

