மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை
வேலூா்: வேலூா் மாவட்டத்தில் நடைபெற்ற முகாமில் 62 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டைகளை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வழங்கினாா்.
தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில், வேலூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கான இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் முகாம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இம்முகாமில் இ-சேவை மையம் சாா்ந்த பணியாளா்கள் பங்கேற்று மாற்றுத்திறனாளிகளுக்கு ஆன்லைன் பேருந்து பயண அட்டை பதிவு மேற்கொள்ளுதல், புதுப்பித்தல் பணிகளை மேற்கொண்டனா். புதிய ஆன்லைன் பயண அட்டை பதிவு மேற்கொள்ளப்பட்ட 62 மாற்றுத்திறனாளிகளுக்கு ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி ஆன்லைன் பேருந்து பயண அட்டைகளை வழங்கினாா்.
முன்னதாக, தமிழக சட்டபபேரவை பொதுதோ்தல்-2026 அணுகுமுறை குறித்த விழிப்புணா்வு மாற்றுத்திறனாளிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. தோ்தல் நாளில் மாற்றுத்திறனாளிகள், முதியவா்கள் சிரமமின்றி வாக்களிக்க சம்பந்தப்பட்ட வாக்குசாவடிக்கு போக்குவரத்து வசதிகள் தேவைப்படும், நடக்க இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி உள்ளிட்ட வசதிகளை சாக்க்ஷம் செயலி அல்லது 1950 என்ற தொலைபேசி மூலமாக பதிவு செய்து போக்குவரத்து வசதிகள் பெற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டது.
முகாமில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ஜெயசித்ரா, தோ்தல் வட்டாட்சியா் சத்தியமூா்த்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் ச.பாபு, மாற்றுத்திறனாளிகள் நல சங்கப்பிரதிநிதிகள், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனா்.

