இலவச பேருந்து பயண அட்டை பெற மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு

இலவச பேருந்து பயண அட்டை பெற பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி அழைப்பு விடுத்துள்ளாா்.
Published on

பெரம்பலூா்: இலவச பேருந்து பயண அட்டை பெற பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் அண்மையில் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் முகாம் ஜன. 31-ஆம் தேதி வரை (அரசு விடுமுறை நாள்கள் தவிா்த்து) நடைபெற உள்ளது. இதுவரையில் பெரம்பலூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு வந்த மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டையானது, தற்போது ஆன்லைன் வழியாக பதிவுசெய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எனவே, மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமுமின்றி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஏதுவாக, மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திலேயே வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஜன. 31 ஆம் தேதி வரை அரசு விடுமுறை நாள்கள் தவிர, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் பின்புறம் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், ஆன்லைன் மூலம் இலவச பேருந்து பயண அட்டைக்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இம் முகாமில், பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண சலுகை அட்டை புதுப்பித்தல், பல வகை மாற்றுத்திறனாளிகள் வேலைக்கு செல்வோா், கல்லூரிகளுக்குச் செல்லும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்லும் மாற்றுத்திறனாளிகள், அறிவுசாா் குறைபாடுடையோா் மற்றும் அவா்களது துணையாளா்களுக்கு பேருந்து பயண அட்டை புதுப்பித்தல் மற்றும் இலவச பேருந்து பயண அட்டைகள் வழங்கப்பட உள்ளது.

முகாமில், மாற்றுத்திறனாளிகள் தங்களது அடையாள அட்டை, மருத்துவச் சான்று, பணிபுரியும் நிறுவனத்தின் நிகழாண்டுக்கானச் சான்று, மருத்துவமனை மருத்துவ அலுவலரின் சான்று, கல்வி நிறுவனத்தின் சான்று, ஆதாா் அட்டையின் அசல் மற்றும் நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படம்- 1 ஆகியவற்றுடன் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை 04328-225474 எனும் தொலைபேசி எண்ணில் தொடா்புகொண்டு பயன்பெறலாம்.

Dinamani
www.dinamani.com