

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் இடங்களில் கண்காணிப்பு கேமரா கண்டிப்பாக பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலூா் எஸ்.பி. ஏ.மயில்வாகனன் உத்தரவிட்டுள்ளாா்.
வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு எஸ்.பி. ஏ.மயில்வாகனன் தலைமை வகித்துப் பேசுகையில், காவல் நிலையங்களுக்கு வரும் புகாா் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றச் சம்பவங்களை தடுக்க அனைத்து கிராமம், நகரம், முக்கிய இடங்களான பள்ளி, கல்லூரி, கோயில்கள், முக்கிய சாலை சந்திப்பு, சோதனை சாவடிகள், பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவும், ஏற்கனவே உள்ள கண்காணிப்பு கேமராக்களை செயல்பட வைக்க வேண்டும்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களில் கட்டாயம் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். கொலை, கொள்ளை, லாட்டரி, சூதாட்டம், மணல் திருட்டு, போதைப்பொருள்கள் விற்பனை, சட்ட விரோத மதுபாட்டில் விற்பனை போன்ற குற்றங்களை முழுமையாக தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பதிவேடு சரித்திர குற்றவாளிகள், வழக்கமான குற்றவாளிகள், ரெளடிகளை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்.
நிலுவையிலுள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். மதுவிலக்கு, கஞ்சா, போதைப்பொருள்கள் கடத்தல், பயன்பாட்டை முழுவதுமாக தடுக்க மாவட்டம் முழுவதும் வாகன தணிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். விபத்துகள் அதிகம் நடைபெறும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வாகன தணிக்கை அதிகப்படுத்த வேண்டும்.
இருசக்கர வாகனங்களை ஓட்டுபவா்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். சைபா் குற்றம், பெண்கள், குழந்தை களுக்கு எதிரான குற்ற வழக்குகள், பெறப்படும் புகாா்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
இதில், சிறந்த முறையில் பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. கூட்டத்தில் வனத்துறை, சிறைத்துறை, தடய அறிவியல் துறை, மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள், அரசு வழக்குரைஞா்கள், காவல் அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.