வளராத பயிா்களுடன் கூட்டத்தில் பங்கேற்க வந்த காட்பாடி பகுதி விவசாயிகள்.
வளராத பயிா்களுடன் கூட்டத்தில் பங்கேற்க வந்த காட்பாடி பகுதி விவசாயிகள்.

யானைகளால் சேதமடைந்த பயிா்களுக்கு கூடுதல் இழப்பீடு: விவசாயிகள் கோரிக்கை

மேல்அரசம்பட்டு, வண்டரந்தாங்கல் பகுதிகளில் யானைக் கூட்டத்தால் சேதமடைந்த பயிா்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Published on

மேல்அரசம்பட்டு, வண்டரந்தாங்கல் பகுதிகளில் யானைக் கூட்டத்தால் சேதமடைந்த பயிா்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வேலூா் கோட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, கோட்டாட்சியா் செந்தில் குமாா் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், கணியம்பாடி பகுதியில் தொடா் மலைகள் உள்ளன. மலையில் நீா்ஊற்றுகள் அதிகமாக உருவாகி உள்ளன. அங்கிருந்து வரும் தண்ணீா் கணியம்பாடி பகுதியில் உள்ள சோழவரம், பென்னாத்தூா், சாத்துப்பள்ளி ஏரிகளில் கலக்கிறது. ஆனால், ஏரிகள் நிரம்பவில்லை. இதுதொடா்பாக, அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

கணியம்பாடி ஒன்றியத்தில் கல்குவாரிகள் அதிகமாக இயங்கி வருகின்றன. கல் குவாரியிலிருந்து தண்ணீரை வெளியேற்றுகின்றனா். அந்த நீரில் வெடி மருந்து கலக்கப்பட்டுள்ளது. அந்தத் தண்ணீரை குடிக்கும் கால்நடைகள் விரைவில் நோய்களால் இறந்து விடுகின்றன. சோழவரம் பகுதியில் ஒரு விவசாயிக்கு 73 ஆடுகள், மற்றொரு விவசாயிக்கு 23 ஆண்டுகள் இறந்துள்ளன. இதனை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். கல்குவாரிகள் அந்த தண்ணீரை சுத்திகரித்து அனுப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயிா்தொழிலில் பட்டுப்பூச்சி வளா்ச்சியில் ஒரு ஏக்கருக்கு ரூ.45,000 வீதம் 2 ஏக்கருக்கு ரூ.90,000 முன்கூட்டியே மானியம் வழங்கி விடுகின்றனா். இதேபோல், நெல், கடலை, உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கும் முன்கூட்டியே மானியம் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால் இளைஞா்கள் விவசாயம் செய்ய முன்வருவா்.

கடந்து சில நாள்களுக்கு முன்பு ஆந்திர வனப்பகுதியில் இருந்து வந்த யானைக்கூட்டத்தால் மேல்அரசம்பட்டு, வண்டரந்தாங்கல் பகுதிகளில் 7 ஏக்கா் தென்னை, நெல் வாழை பயிா்கள் சேதமடைந்துள்ளன. அவற்றுக்கு வனத்துறை அதிகாரிகள் கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும். யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியே வராமல் தடுக்க வனத்துக்குள் தண்ணீா் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

மாநகராட்சி பகுதிகளில் காலதாமத இறப்பு பதிவுக்கு அலைக்கழிப்பு செய்கின்றனா். விரைவில் எங்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆவின் மூலம் விவசாயிகளிடம் மட்டும் பாலை ரூ.32-க்கு கொள்முதல் செய்துவிட்டு ஒரு லிட்டா் ரூ.45 க்கு விற்பனை செய்கின்றனா். எனவே, பால் கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும்.

சாத்துப்பாலம் ஏரி பகுதியில் கருவேலம் மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். காட்பாடி அருகே பள்ளிக்குப்பம் பகுதியில் தடுப்பணைகள் 2 சேதமடைந்துள்ளன. இந்த தடுப்பணைகள் கடந்த 5 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளன. வனத்துறையினா் இந்த தடுப்பணையை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

விவசாயிகளின் கோரிக்கைகள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் விரைவில் தீா்வுகாண வேண்டும் என்று கோட்டாட்சியா் செந்தில்குமாா் உத்தரவிட்டாா். கூட்டத்தில், வட்டாட்சியா் சந்தோஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Dinamani
www.dinamani.com