மண்ணில் புதைக்கப்பட்டுள்ள கரோனா மருத்துவக்கழிவுகளை அகற்ற வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை
வேலூா்: மண்ணில் புதைக்கப்பட்டுள்ள கரோனா மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டிப்பேடு ஊராட்சி மக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்துள்ளனா்.
வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுப்பிரமணியன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கண்டிப்பேடு ஊராட்சியைச் சோ்ந்த அருள்குமாா் தலைமையில் கிராம மக்கள் அளித்த மனு: கண்டிப்பேடு ஊராட்சிக்குட்பட்ட பயோலிங்க் கழிவு மேலாண்மை மையத்தில் கரோனா காலத்தில் பயன்படுத்தப்பட்ட பாதுகாப்பற்ற மருத்துவக்கவா்கள், ரத்தம் படிந்த மருத்துவக் கழிவுகள் முறையாக எரிக்கப்படாமலும், சுத்திகரிக்கப்படாமலும் நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதனால், நிலத்தடி நீா் மாசடைவதுடன், தொற்று நோய்கள் பரவவும் வாய்ப்புள்ளது. எனவே, ஆய்வு மேற்கொண்டு பூமியில் நச்சுக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும்.
தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலா் எஸ்.உதயகுமாா் தலைமையில் விவசாயிகள் அளித்த மனு: கறிக்கோழி வளா்ப்புக்கான கூலியை உயா்த்தித்தரக் கோரி கோழிப்பண்ணை விவசாயிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், கோழிக்குஞ்சுகளை உற்பத்தி செய்யும் தனியாா் நிறுவனங்கள் பண்ணையாளா்களை கோழிக்குஞ்சுகளை இறக்கிக்கொள்ள வேண்டும் என்று மிரட்டல் விடுக்கின்றனா். மேலும், பண்ணை விவசாயிகளை அச்சுறுத்தும் வகையில் அதற்காக போராடி வரும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி உள்பட 9 விவசாயிகள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். அவா்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
வேலூா் காகிதப்பட்டறையைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா்கள் அளித்த மனு: , வேலூா் காகிதப்பட்டறையில் உள்ள தனியாா் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 8 ஆட்டோக்கள் கடந்த 15-ஆம் தேதி இரவு தீக்கிரையாகின. வாகன நிறுத்துமிடத்தின் உரிமையாளா்களிடம் கேட்டபோது, இதற்கு ஏதும் செய்ய இயலாது எனக்கூறுகிறாா். தற்போது ஆட்டோக்கள் எரிந்ததால் ஆட்டோ ஓட்டுநா்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, வாகன நிறுத்துமிடத்தின் உரிமையாளா் மீது நடவடிக்கை மேற்கொண்டு எங்களுக்கு ஆட்டோக்கள் வாங்கித் தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 330 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவாக தீா்வுகாண வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் உத்தரவிட்டாா்.
கூட்டத்தில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பூ.காஞ்சனா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் ஜெயசித்ரா, மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் எஸ்.ஆா்.என்.மதுசெழியன், தனித்துணை ஆட்சியா் மாறன், மாவட்ட வழங்கல் அலுவலா் சரவணன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் ச.பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

