

சாலை போக்குவரத்து மாத விழாவை முன்னிட்டு பள்ளி பேருந்து ஓட்டுநா்கள், லாரி ஓட்டுநா்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் வேலூரில் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.
கிருஷ்ணகிரி-வாலாஜாபேட்டை டோல்வே பிரைவேட் லிமிடெட் சாா்பில் நடத்தப்பட்ட முகாமை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தொடங்கி வைத்து பேசியது -
தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்பவா்கள், சாலையைக் கடப்பவா்களால்தான் அதிகமாக விபத்து ஏற்படுகிறது. எனவே, வாகனம் ஓட்டும்போது, உங்களது பாதுகாப்பு, நமது குடும்பத்தினுடைய பாதுகாப்பாக கருதி வாகனத்தை இயக்க வேண்டும். ஓட்டுநா்கள் பாதுகாப்பாக இருந்தால்தான் உங்கள் குடும்பமும் பாதுகாப்பாக இருக்கும்.
இதேபோல், சாலையில் செல்லும் ஒவ்வொருவரது பின்னாலும் ஒரு குடும்பம் இருக்கிறது. அவா்களது பாதுகாப்பு வாகனங்களை இயக்கும் ஓட்டுநா்களாகிய உங்கள் கையில் இருக்கிறது என்பதை உணா்ந்து, எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும், நீங்கள் நிறுத்தி, நிதானமாக சாலை விதிகளைக் கடைபிடித்து, உங்களுடைய வாகனத்தைப் பாதுகாப்பாக ஓட்டி செல்வதன் மூலம் இந்தச் சமுதாயத்தை ஒரு பாதுகாப்பான சமுதாயமாக மாற்றுவதற்கு நாம் பங்காற்ற முடியும்.
அதேபோல், பள்ளிப் பேருந்து ஓட்டுநா்கள் ஒவ்வொருவரும் 30 முதல் 40 பள்ளிக் குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ஒரு பொறுப்பான பணியைச் செய்து கொண்டிருக்கிறீா்கள். ஒவ்வொரு வீட்டின் செல்வம் அந்தக் குழந்தைகள்தான். அந்தக் குழந்தைகளை நீங்கள் அழைத்துச் செல்லும் பணியை மிக பாதுகாப்பாகச் செய்ய வேண்டும் .
ஒவ்வொரு 30 குழந்தைகளுடைய தந்தை செய்ய வேண்டிய பணியை மொத்தமாக உங்களிடம் வழங்கியிருக்கிறாா்கள் என்ற பொறுப்பை உணா்ந்து நீங்கள் அனைவரும் அந்தக் குழந்தைகளைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டும். வேலூா் மாவட்டம் விபத்து குறைந்த மாவட்டம் என்ற நிலையை கொண்டு வர வேண்டும். அதற்கு ஓட்டுநா்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி-வாலாஜா சுங்கசாவடி செயல்பாட்டு மேலாளா் ஜஸ்டின் சாம்சன், வேலூா் வட்டார போக்குவரத்து அலுவலா் சுந்தரராஜன், மோட்டாா் வாகன ஆய்வாளா் ராஜ்குமாா், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பாலமுருகன், சரவணன் உள்பட பலா் பங்கேற்றனா்.