"கை' ஓங்குமா?-"முரசு' கொட்டுமா?

கோவை, ஆக.16: தொண்டாமுத்தூர் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸýம், தேமுதிகவும் நேரடியாக பலப்பரீட்சையை சந்திக்கின்றன.   காங்கிரஸ், தேமுதிக, பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொமுக உள்பட 22 வேட்பாளர்கள் களத்
Updated on
2 min read

கோவை, ஆக.16: தொண்டாமுத்தூர் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸýம், தேமுதிகவும் நேரடியாக பலப்பரீட்சையை சந்திக்கின்றன.

  காங்கிரஸ், தேமுதிக, பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொமுக உள்பட 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இருப்பினும், காங்கிரஸின் எம்.என்.கந்தசாமிக்கும், தேமுதிகவின் கே.தங்கவேலுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

  கடந்த மக்களவைத் தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற்ற புதிய கட்சியான கொங்குநாடு முன்னேற்றக் கழகம், இப்போது இடைத் தேர்தலில் களம் இறங்கியிருக்கிறது. பிரபலமான வேட்பாளர் வேண்டும் என்பதால் கட்சியின் பொதுச் செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன் களம் இறக்கப்பட்டுள்ளார்.

  இத் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ எம். சின்னராஜு பாஜக சார்பிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிட் சார்பில், கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் வி.பெருமாளும் களத்தில் உள்ளனர்.

  வாக்காளர்களில் கொங்கு வேளாளக் கவுண்டர்கள், ஒக்கலிக கவுடர், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் பிரதானமாக உள்ளனர்.

திமுகவின் பக்கபலம்...:  காங்கிரஸ் வேட்பாளருக்கு பக்க பலம் கொடுத்திருப்பது திமுகதான். இதுவரை இல்லாத அளவுக்கு தொண்டாமுத்தூர் இடைத் தேர்தலில் திமுகவினர் சுழன்று பணியாற்றினர்.

  மத்திய அமைச்சர்கள் ஆ.ராசா, செ.காந்திச்செல்வன், முன்னாள் அமைச்சர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், மு.கண்ணப்பன், என்.கே.கே.பி.ராஜா உள்ளிட்டோர் கோவையில் முகாமிட்டு தேர்தல் பணிகளைக் கவனித்தனர்.

  கோவை மாவட்டத்தில் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வரும் திமுக, தொண்டாமுத்தூர் இடைத் தேர்தலை ஒரு சவாலாகவே எடுத்துள்ளது. இதனால் காங்கிரûஸ விட அதிக சிரத்தை எடுத்துப் பணியாற்றியோர் திமுகவினர்தான்.

  துணை முதல்வர், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், மக்களவை, பேரவை உறுப்பினர்கள் என தினம் ஒருவராக காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினர். திமுகவின் சுறுசுறுப்பு, காங்கிரஸின் வழக்கமான கோஷ்டி பூசலேயே பின்னுக்குத் தள்ளிவிட்டது

  காங்கிரஸின் பிரசாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் சாதனைகள், இலவசத் திட்டங்களே திரும்ப, திரும்ப ஒலித்தன. எனினும், மாநில அரசு அளித்த இலவசங்களின் தாக்கம் தொகுதி மக்களிடத்தில் இருப்பதைக் காண முடிகிறது.

மனமாற்றத்தை பலமாக...இதுவரை இரு பிரதான கட்சிகளை எதிர்த்து வந்த தேமுதிக, இம்முறை திமுகவை மட்டுமே எதிர்கொள்கிறது. அதிமுகவின் தேர்தல் புறக்கணிப்பு ஒரு வகையில் தேமுதிகவுக்கு சாதகம் என்றே கூற வேண்டும்.

  இத் தொகுதியில் கணிசமாக இருக்கும் தாழ்த்தப்பட்டோரைக் குறி வைத்து பிரசாரத்தை முடித்துள்ளது இக் கட்சி. கடைசி 3 நாள்களில் கேப்டனின் பிரசாரம் வாக்காளர்களிடையே மனமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது எனக் கூறுகின்றனர் தேமுதிகவினர். அதிமுகவினரை நேரடியாகச் சந்தித்தும் ஆதரவு கோரியுள்ளனர்.

"பலம்' கைகூடுமா?: மக்களவைத் தேர்தலில் தங்களது சமூகத்தினரின் வாக்குகளை சிதறாமல் பெற்றது கொமுக. இடைத் தேர்தலில் அக் கட்சியின் வேகம் சற்று குறைந்திருக்கிறது.

  பிரதானக் கட்சிகளின் வேட்பாளர்களும் கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்தினர் என்பதால், வாக்கு வங்கியை கொமுக தக்க வைத்துக் கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரத்தில் கூடியிருக்கிறது.

  பாஜக சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்எல்ஏ சின்னராஜுவுக்கு, தொகுதி மக்களிடம் நல்ல பெயர் இருக்கிறது.

 மேலும், அவரது சமூகத்தினரின் வாக்குகளில் பெரும் பகுதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிடும் பெருமாள், கட்சியின் வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்வார் என்பதில் சந்தேகமில்லை.

  ஆளுங்கட்சிக்கு சாதகமான நிலை இருந்தாலும், கடுமையான போட்டிக்குரிய கட்சியாக களத்தில் உள்ளது தேமுதிக.

 வாக்காளர்களின் கடைசிநேர மனநிலை மாற்றங்களும், அதிமுகவின் வாக்குகள் எங்கே செல்லும் என்பதுமே வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும். எனினும், "வெற்றி நமதே' என்ற களிப்பில் உள்ளனர் திமுக-காங்கிரஸ் கட்சியினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com