வால்பாறையில் புலியைக் கொன்று தோல் திருட்டு நகம், மண்டையோடு பறிமுதல்

 பொள்ளாச்சி, டிச.20: ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்ளிட்ட வால்பாறை சரகத்தில் புலியைக் கொன்று தோல் கடத்தியது தொடர்பாக எஸ்டேட் தொழிலாளர்கள் 4 பேரிடம் வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி
Updated on
1 min read

 பொள்ளாச்சி, டிச.20: ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்ளிட்ட வால்பாறை சரகத்தில் புலியைக் கொன்று தோல் கடத்தியது தொடர்பாக எஸ்டேட் தொழிலாளர்கள் 4 பேரிடம் வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 இச்சம்பவத்தால் வனத்துறையினர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

 ஆனைமலை புலிகள் சரணாலயம் 958 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டது. புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால் மத்திய அரசு இதைக் கடந்த 2007-ல் புலிகள் சரணாலயமாக அறிவித்தது. புலிகளின் எச்சங்கள், காலடித் தடங்கள் ஆகியவற்றை வைத்து சரணாலயத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்ததை வனத்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

 இந்த நிலையில் தோலுக்காகப் புலிகள், தந்தத்துக்காக யானைகள், கொம்பு மற்றும் தோலுக்காக மான்கள் வேட்டையாடுவதைத் தடுப்பதற்காக புலிகள் காப்பகத்தில் வேட்டைத் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் இப்பாதுகாப்பையும் மீறி அவ்வப்போது வனவிலங்குகள் வேட்டையாடப்படுகின்றன.

 இந்த நிலையில் வால்பாறையில் உள்ள தனியார் எஸ்டேட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன் புலியொன்றை எஸ்டேட் தொழிலாளர்கள் 5 பேர் சேர்ந்து கொன்று தோலைக் கடத்தியுள்ளனர்.

 இது தொடர்பாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்து தோலை வாங்குவது போல முயற்சி செய்து எஸ்டேட் தொழிலாளரான தமிழ்ச்செல்வன் என்பவரைக் கடந்த வியாழக்கிழமை கைது செய்தனர்.

 அவர் கொடுத்த தகவலின் பேரில் மேலும் 3 தொழிலாளர்களிடம் வனத்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 எஸ்டேட் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த புலி நகம் மற்றும் மண்டையோடு ஆகியவற்றை வனத்துறையினர் கைப்பற்றியுள்ளனர். தோல் தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சில தொழிலாளர்கள் தலைமறைவாகியுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களாக சந்தனக் கட்டைகள் வெட்டிக் கடத்தப்பட்டது தொடர்பாக 4 மலைவாழ் மக்களை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

 இந்த நிலையில் புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட பின் புலியைக் கொன்று தோலைக் கடத்தியது தொடர்பாக 4 பேரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருவது ஆனைமலை புலிகள் காப்பகத்தைச் சேர்ந்த வனத்துறை அதிகாரிகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com