மேலவை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதில் சிக்கல்

திருப்பூர், டிச. 5: தனியார் நிறுவனங்களிடம் பணிக்குச் சேர்ந்துள்ள பெரும்பாலான பட்டதாரிகளின் அசல் கல்விச்சான்றிதழ்களை அந்த நிறுவனங்களின் நிர்வாகங்களே பெற்று வைத்துள்ளன. இதனால், மேலவை வாக்காளர் பட்டியலில
Updated on
1 min read

திருப்பூர், டிச. 5: தனியார் நிறுவனங்களிடம் பணிக்குச் சேர்ந்துள்ள பெரும்பாலான பட்டதாரிகளின் அசல் கல்விச்சான்றிதழ்களை அந்த நிறுவனங்களின் நிர்வாகங்களே பெற்று வைத்துள்ளன. இதனால், மேலவை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆர்வம் இருந்தும், பட்டதாரிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தமிழக சட்டமேலவைத் தேர்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள 7 பட்டதாரி தொகுதிகள், 7 ஆசிரியர் தொகுதிகளில், பட்டதாரிகள், ஆசிரியர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், பட்டதாரிகளிடம் இருந்து போதிய அளவில் விண்ணப்பங்கள் வருவதில்லை.

உதாரணமாக, மேற்கு மண்டலத் தொகுதிக்கு உட்பட்ட திருப்பூர் மாவட்டத்தில் கடந்த நவ. 22ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி 6,915 பட்டதாரிகளும், 1,057 ஆசிரியர்களும் மட்டுமே வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, டிச. 7 வரை மேலவை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அவகாசம் வழங்கப்பட்டிருந்தும் பட்டதாரிகள் போதிய அளவில் விண்ணப்பிக்கவில்லை.

இதற்கு மேலவை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பட்டதாரிகள் தங்கள் அசல் கல்விச்சான்றிதழைக் காட்ட வேண்டும் என்பதே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் 75 சதவிகித பட்டதாரிகள் தனியார் நிறுவனங்களிலேயே பணியாற்றி வருகின்றனர். பெரும்பாலான நிறுவனங்கள், பட்டதாரிகளை வேலைக்குச் சேர்க்கும் போதே அவர்களின் அசல் கல்விச் சான்றிதழ்களைப் பெற்று வைத்துக் கொள்கின்றன. குறிப்பாக திருப்பூர் போன்ற தொழில் நகரங்களிலுள்ள நிறுவனங்களில் பணியமர்த்தப்படும் பட்டதாரிகளிடம் அசல் கல்விச் சான்றிதழ் பெறுவது கட்டாயமாக உள்ளது.தகுதி வாய்ந்த பட்டதாரிகள் வேலையை கற்றுத் தெரிந்தவுடன் வேறு நிறுவனங்களுக்கு வேலைக்குச் சென்றுவிடுவதைத் தடுக்கவும், பணிபுரியும் ஊழியர்களாலேயே நிறுவனத்திற்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கவும் இந்த உத்தி கையாளப்படுகிறது.

இச்சூழ்நிலையில், மேலவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர் க்க அசல் கல்விச் சான்றுகள் கேட்கப்படுவதால், தனியார் நிறுவன நிர்வாகத்திடம் கொடுத்துள்ள சான்றிதழ்களைப் பெற முடியாமல் பட்டதாரிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மேலவை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பத்துடன் நகல் கல்விச் சான்றிதழ் இணைத்தால் போதும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், அந்த நகல் கல்விச்சான்றிதழ்களில் வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டாட்சியர், பள்ளித் தலைமையாசிரியர், கலை அறிவியல் கல்லூரி முதல்வர், ராணுவப் பள்ளி முதல்வர் ஆகிய 5 பேரில் ஒருவரிடம் அத்தாட்சிக் கையொப்பம் பெற்று வருவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

அதன்படி, நகல் கல்விச் சான்றிதழ்களில் கையொப்பம் பெற அந்த அலுவலர்களிடம் செல்லும் பட்டதாரிகள் கல்விச் சான்றிதழைக் காட்ட வேண்டியுள்ளது. ஆனால்,  பணிபுரியும் நிறுவனங்களிடம் அசல் கல்விச் சான்றிதழ்கள் சிக்கியுள்ளதால், பெரும்பாலான பட்டதாரிகள் ஆர்வம் இருந்தும் அதற்கான வழிதெரியாமல் தவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com