கிராமக் கோயில்களில் அதிகரிக்கும் கொள்ளை!

திருப்பூர், டிச.25: கிராமக் கோயில்களை குறிவைத்து நடக்கும் கொள்ளைச் சம்பவங்கள் சமீபகாலமாக பல பகுதிகளிலும் அதிகரித்து வருகிறது. இக்கொள்ளைகளில் இருந்து விலை மதிப்பற்ற சிலைகள், நகைகள், உண்டியல் பணங்களை பா
Updated on
2 min read

திருப்பூர், டிச.25: கிராமக் கோயில்களை குறிவைத்து நடக்கும் கொள்ளைச் சம்பவங்கள் சமீபகாலமாக பல பகுதிகளிலும் அதிகரித்து வருகிறது. இக்கொள்ளைகளில் இருந்து விலை மதிப்பற்ற சிலைகள், நகைகள், உண்டியல் பணங்களை பாதுகாக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இந்து சமய அறநிலையத் துறைக்கும், காவல்துறைக்கும் ஏற்பட்டுள்ளது.

 காவல் துறையைப் போன்று இந்து சமய அறநிலையத் துறையும் கோயில்களில் நிரந்தரமாகப் பாதுகாப்புக் குழு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.  திருப்பூர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான கோயில்கள் உள்ளன.

அதில், 10 பெரிய கோயில்களும், 40 சிறிய கோயில்களும் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன.

 இந் நிலையில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள கோயில்களை குறிவைத்து கொள்ளை நடப்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, காங்கயம் தாலுகாவுக்கு உட்பட்ட வெள்ளக்கோயில், முத்தூர், குண்டடம், ஊதியூர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள கிராமக் கோயில்களில் அதிகளவில் கொள்ளைகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2010 ஜனவரி முதல் குண்டடம் தாசர்பட்டி குலம்மன்கோயில், வெள்ளக்கோயில் அருகே புதுப்பை செல்லாண்டியம் கோயில், குண்டடம் அருகே சூரியநல்லூர் வீரமாத்தியம்மன் கோயில் ஆகியவற்றில் லட்சக்கணக்கான மதிப்புடைய சிலைகள், நகைகள், உண்டியல் பணம் திருடப்பட்டுள்ளன.

 அதன்தொடர்ச்சியாக, டிசம்பர் மாதத்தில் மட்டும் வெள்ளக்கோயில் அருகே வீரசோழபுரத்திலுள்ள அடஞ்சரம்மன் கோயில், ஏரிமுண்டி கருப்பணசாமி கோயில், கருப்பணசாமி கோயில், கன்னியாத்தாள் கோயில், எலையப்ப சாமி கோயில், முத்தூர் மங்கலப்பட்டி உமகாளியம்மன் கோயில் ஆகியவற்றில் பல்லாயிரக்கணக்கான மதிப்புடைய வெள்ளிப் பொருட்கள், காஸ் சிலிண்டர்கள், உண்டியல் பணத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

  கடந்த வாரம் ஊதியர் கொத்தனூர் மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற கொள்ளையில் 6.5 பவுன் நகைகள், சாமி சிலை, 4 வேல், 3 சிலிண்டர், உண்டியல் பணம் என லட்சக்கணக்கான மதிப்புடைய பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

  கிராமக் கோயில்களை குறிவைத்து நடக்கும் கொள்ளைகளால் காங்கயம் தாலுகாவுக்கு உட்பட்ட மக்களிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அப்பகுதியிலுள்ள பெரும்பாலான கிராமக் கோயில்களுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய விலை மதிப்பற்ற வெண்கல, ஐம்பொன் சிலைகள், நகைகள், உண்டியல் பணங்களும் அதிகளவில் உள்ளன. ஆனால், கோயில் சொத்துக்களை முறைப்படி பாதுகாக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லை. காவல்துறை சார்பிலும் கொள்ளை நடந்த கோயில்களில் மட்டும் தடயவியல் சோதனைகள் நடத்தப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், அக்கோயில் சொத்துக்களை முன்கூட்டியே பாதுகாக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு மக்களிடையே எழுந்துள்ளது.

 நகரப் பகுதிகளில் நடக்கும் பல்வேறு குற்றச்செயல்களை கட்டுப்படுத்த இரவு நேர பாதுகாப்புப் பணியில் போலீஸôருடன் இணைந்து பணியாற்ற ஆர்வமுள்ள இளைஞர்களைக் கொண்ட "காவல் நண்பர்கள் குழு' அமைக்கப்படுகின்றன. அதேபோன்று கிராமக் கோயில்களின் விலைமதிப்பற்ற சொத்துக்களை பாதுகாக்கவும் அந்தந்த கிராமத்துக்கு உட்பட்ட இளைஞர்களைக் கொண்டு நிரந்தர கண்காணிப்பு குழு அமைத்து செயல்படுத்தலாம்.

 நகைகள், விலைமதிப்பற்ற சிலைகள் உடைய முக்கியக் கோயில்களை அடையாளம் கண்டு அக்கோயில்களில் சைரன் பொருத்தவும் இந்து சமய அறநிலையத் துறை உதவியோடு காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளலாம். இதன்மூலம் கோயில்களில் நடைபெறும் கொள்ளைகளை பெருமளவில் தடுக்க முடியும் என்பது சமூக நல ஆர்வலர்களின் கருத்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com