சேலம், ஜூலை 10: தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தால் காற்றாலை மின் உற்பத்தி வெள்ளிக்கிழமை முதல் அறவே நிறுத்தப்பட்டது. சென்னையில் இருந்து நிலக்கரி ஏற்றுமதி செய்வதிலும் பிரச்னை தொடருவதால் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டு அனல் மின் நிலையங்களிலும் உற்பத்திக் குறைந்துள்ளது.
தமிழகத்துக்கு நாளொன்றுக்கு சுமார் 11,000 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் தேவைப்படுகிறது. இதில் 5,690 மெகா வாட் மின்சாரம் அனல், நீர், காற்றாலை
மின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. 2,800 மெகா வாட் மின்சாரம் மத்திய மின் உற்பத்தி நிலையங்களில் இருந்தும், சுமார் 1,500 மெகா வாட் மின்சாரம் தனியாரிடம் இருந்தும் விலைக்கு வாங்கப்படுகின்றன.
அப்படி இருந்தும் நாள்தோறும் ஏற்படும் சுமார் 1,500 மெகா வாட் மின்
பற்றாக்குறையை ஈடு செய்வதற்காக சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் நாள்தோறும் குறைந்தது 2 மணி நேரம் முதல் கட்டாய மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
தமிழகத்தில் காற்றாலைகள் மூலம் அதிகபட்சம் 4,800 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஆனால் காற்றின் வேகத்தை பொறுத்து சராசரியாக 2 ஆயிரம் மெகா வாட் வரை மின்சாரம் உற்பத்தி ஆகி வந்தது. கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு வரை 2 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் காற்றாலைகளில் உற்பத்தி ஆன நிலையில் வெள்ளி, சனிக்கிழமைகளில் அது பூஜ்ஜியமாக குறைந்தது.
அனல் மின் உற்பத்தியும் குறைந்தது: அதே சமயம் தமிழகத்தில் செயல்பட்டு வரும் வடசென்னை, எண்ணூர், மேட்டூர், தூத்துக்குடி அனல் மின் நிலையங்களிலும் நிலக்கரி பற்றாக்குறையால் மின் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. வடசென்னையில் 630 மெகா வாட்டும், எண்ணூரில் 450 மெகா வாட்டும், மேட்டூரில் 840 மெகா வாட்டும், தூத்துக்குடியில் 1,050 மெகா வாட்டும் அதிகபட்சமாக மின்சாரம் தயாரிக்க முடியும்.
இந்த நிலையில் சென்னையில் இருந்து அனல் மின் நிலையங்களுக்கு ரயில் மூலம் எடுத்துச் செல்லும் நிலக்கரியை, வேகன்களில் ஏற்றும் காண்டிராக்ட் பெற்றுள்ள நிறுவனத்துக்கும், மின்வாரியத்துக்கும் தொடர்ந்து பல மாதங்களாக பிரச்னை நிலவி வருகிறது.
இங்கு அடிக்கடி நடைபெறும் குளறுபடிகளாலும், தொடர் மழை பெய்யும் காலங்களிலும் அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி ஏற்றும் பணி பாதிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இப்போது கடந்த ஒரு வாரமாக நிலக்கரி ஏற்றும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
லாரிகளில் நிலக்கரி: இதனால் எண்ணூர், வடசென்னை மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. எண்ணூரில் சனிக்கிழமை காலை நிலவரப்படி நிலக்கரி பற்றாக்குறையால் 450 மெகா வாட்டுக்கு பதிலாக வெறும் 95 மெகா வாட் மின்சாரமே உற்பத்தி ஆனது. அதுவும் இந்த மின் நிலையங்களுக்கு லாரிகள் மூலமாகவே கடந்த சில நாள்களாக நிலக்கரி ஏற்றிச் செல்லப்படுகிறது.
மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு நாளொன்றுக்கு 14 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில் சனிக்கிழமை இரவு 8 மணியளவில் 10 ஆயிரம் டன்னுக்கும் குறைவாகவே நிலக்கரி கையிருப்பு உள்ளதாக அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் மின் உற்பத்தி செய்யும் யூனிட்டுகளை அறவே நிறுத்துவதற்கு பதிலாக உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மேட்டூரில் 840 மெகா வாட்டுக்கு பதிலாக 630 மெகா வாட் மின்சாரமே உற்பத்தி செய்யப்படுகிறது. அதுவும் நிலக்கரியுடன் பர்னஸ் ஆயில் என்ற எரி எண்ணெயை சேர்த்து பயன்படுத்துவதாலேயே இந்த அளவு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முறை மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தின் உற்பத்தி செலவு யூனிட்டுக்கு 6 ரூபாய் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல் தூத்துக்குடியில் மேலும் இரண்டு நாள்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஏற்கெனவே மின்வெட்டு அமலில் இருக்கும் நிலையில் இப்போது காற்றாலை மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. இத்துடன் நிலக்கரி பிரச்னையும் சேர்ந்துள்ளதால் மின் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
மின் தடை அதிகரிக்கும்: இதனால் மாநிலம் முழுவதும் எந்த நேரத்திலும் கூடுதல் மின்வெட்டு செய்யப்படலாம் என்று அஞ்சப்படுகிறது. கடந்த சில நாள்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் பம்பு செட்டுகளை இயக்கவில்லை. அடுத்த சில நாள்களில் அவர்கள் பம்பு செட்டுகளை பயன்படுத்தத் தொடங்கினால் மின் தேவை அதிகரிக்கும். இது சிக்கலை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
இதற்கிடையே நிலக்கரி ஏற்றுமதி பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணாமல் தனியாரிடம் அதிக அளவு விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதிலேயே அரசு ஆர்வம் காட்டி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின்வாரிய உயர் அதிகாரிகள் கூறியது:
சென்னையில் அண்மையில் பெய்த மழையால் நிலக்கரி நனைந்துவிட்டது. மேலும் கப்பலில் இருந்தும் இறக்குமதி செய்யவில்லை. அத்துடன் நிலக்கரியை ரயிலில் ஏற்றும் கன்வேயர் பெல்ட் கிழிந்து பழுதடைந்துள்ளது. நிலக்கரியை வேகனில் ஏற்றுவதில் சிறிய பிரச்னை நிலவுவதால் அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதை சீர் செய்வதற்காக சென்னையில் உள்ள அனல் மின் நிலையங்களுக்கு லாரிகள் மூலம் நிலக்கரி கொண்டுச் செல்லப்படுகிறது. மேலும் தமிழகத்தில் வெள்ளிக்கிழமை முதல் 2 ஆயிரம் மெகா வாட் காற்றாலை மின் உற்பத்தி குறைந்துவிட்டது.
வெள்ளிக்கிழமை இரவு ஒட்டுமொத்த தேவை 9,317 மெகா வாட்டாக இருந்தது. ஆனால் உற்பத்தி இதைக் காட்டிலும் குறைவாகவே இருந்தது.
அனல் மின் நிலையங்களுக்கு விரைவில் நிலக்கரி சப்ளை செய்யப்படும். இருப்பினும் சென்னையில் மின் நிறுத்தம் செய்யும் நிலை உருவாகாது என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.