சேலம், ஜூன் 1: காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்படுவதில் உறுதியற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அணை திறப்புக்கு 11 நாள்களே உள்ள நிலையில் அணையின் நீர்மட்டமும், நீர் வரத்தும் குறைவாக இருப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் 11 மாவட்டங்களில் உள்ள 16 லட்சம் ஏக்கர் நிலத்துக்கு பாசன வசதி அளிக்கும் மேட்டூர் அணை, குறுவை சாகுபடிக்காக ஆண்டு தோறும் ஜூன் 12-ம் தேதி திறக்கப்படுவது வழக்கம்.
ஜூன் மாதத்தில் திறக்கப்படும் தண்ணீர் ஜனவரி 28-ம் தேதி நிறுத்தப்படும். இந்த காலகட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போகம் பயிர்கள் விளைவிக்கப்படும். இதற்காக 320 டி.எம்.சி. தண்ணீர் ஆண்டுதோறும் தேவை.
மேட்டூர் அணை கட்டப்பட்டு 77 ஆண்டு காலத்தில், அணையில் போதிய அளவில் நீர் இருந்ததால் ஜூன் 12-ம் தேதிக்கு முன்பாகவே இதுவரை 10 முறை அணை
திறக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட ஜூன் 12-ம் தேதியில் 15 முறை அணை திறக்கப்பட்டுள்ளது. ஆனால் பருவமழை பொய்த்தல், போதிய நீர் இருப்பு இல்லாதது போன்றவற்றால் இதுவரை 51 முறை குறிப்பிட்ட தேதிக்கு பின்னர்தான் அணை திறக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 120 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 90 அடிக்கு மேல் இருந்தால் தண்ணீர் திறக்கப்படும். அதே சமயம் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகமாக இருக்க வேண்டும். பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஜூன் முதல் வாரத்தில் அணையை பார்வையிட்டு, ஆய்வு நடத்தி அரசுக்கு தகவல் தெரிவிப்பார்கள். அதன் பிறகு அணை திறப்பு குறித்து முடிவு செய்யப்படும்.
கடந்த ஆண்டு ஜூன் 8-ம் தேதி காவிரி தொழில்நுட்பக் குழு அணையை பார்வையிட்டபோது வெறுமனே 23 டி.எம்.சி. தண்ணீர் தான் இருந்தது. இதனால் குறிப்பிட்ட ஜூன் 12-ம் தேதிக்கு பதிலாக, நீர்மட்டம் 94 அடியைத் தாண்டியதும் 45 நாள்கள் தாமதமாக ஜூலை 28-ம் தேதிதான் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
ஆனால் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது இந்த ஆண்டு சற்று கூடுதலாகவே தண்ணீர் உள்ளது. அதாவது திங்கள்கிழமை (மே 31) மாலை 4 மணி நிலவரப்படி அணையின் நீர் இருப்பு 38.11 டி.எம்.சி.யாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 76.03 அடியாகவும், நீர் வரத்து 2,512 கன அடியாகவும் உள்ளது.
இதனால் இந்த ஆண்டும் குறிப்பிட்ட நாளில் அணை திறக்கப்படுவது கேள்விக்குறியாகி உள்ளது.
பருவமழை தேவை: கர்நாடகத்தின் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழையால் தண்ணீர் கிடைக்கும்போதுதான் மேட்டூர் அணை, நீரைப் பெற முடியும்.
இந்த ஆண்டு பருவமழை அடுத்த 24 மணி நேரத்துக்குள் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இருப்பினும், தொடர்ந்து 10 நாள்களுக்கு மழை பெய்து குறைந்தது வினாடிக்கு 2 லட்சம் கன அடி தண்ணீர் வந்தால்தான் மேட்டூர் அணைக்கு தேவையான தண்ணீர்
கிடைக்கும் நிலை உள்ளது.
ஏனெனில் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வர வேண்டும் என்றால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகள் யாவும் நிரம்ப வேண்டும்.
அதன்பின், இந்த உபரி நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டு மேட்டூர் வந்து சேரும். கடந்த புதன்கிழமை நிலவரப்படி கர்நாடக அணைகளுக்கு 82 டி.எம்.சி. தண்ணீர் இருந்தால்தான் 4 அணைகளும் நிரம்பும் நிலை உள்ளது.
அந்த அணைகள் நிரம்பி அதன் பிறகு ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு சுமார் 40 டி.எம்.சி. தண்ணீர் மேட்டூரில் இருக்கும் பட்சத்திலும், நீர்வரத்து வினாடிக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் கன அடி வரை இருந்தால் மட்டுமே மேட்டூரில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் கர்நாடகம்: இதற்கிடையே பருவமழையை எதிர்பார்த்து கர்நாடக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணைகளில் இருக்கும் தண்ணீரை அவசரமாக வெளியேற்றி வருகிறது.
கடந்த வார தொடக்கத்தில் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து ஆற்றில் 200 கன அடியும், கால்வாயில் 300 கன அடியும் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
ஆனால் வாரத்தின் இறுதியில் அணையில் இருந்து ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவு 912 கன அடியாகவும், கால்வாயில் வெளியேற்றப்படும் நீரின் அளவு 3,256 அடியாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஆற்றில் தண்ணீர் திறப்பு அதிகரித்தால் மேட்டூருக்கு அந்த தண்ணீர் வந்துவிடும் என்பதால் உள்ளூரில் உள்ள ஏரிகளை நிரப்ப கால்வாயில் அதிகளவில் நீர் விடப்படுகிறது. இதே நடைமுறைதான் மற்ற மூன்று அணைகளிலும் கடைப்பிடிக்கப்படுகிறது.
கூடுதல் தண்ணீர்: இதற்கிடையே காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி வர வேண்டிய
நீரைக் காட்டிலும் கடந்த ஆண்டு கூடுதலாக தண்ணீர் வந்துள்ளது திங்கள்கிழமை தெரியவந்துள்ளது. நடுவர் மன்ற தீர்ப்புப் படி ஆண்டு தோறும் ஜூன் முதல் தேதி முதல் மே 31-ம் தேதி வரை 205 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.
1.6.09 முதல் 31.5.10 வரை 219.71 டி.எம்.சி. தண்ணீர் வந்துள்ளது. அதாவது 14.71 டி.எம்.சி தண்ணீர் கூடுதலாக வந்துள்ளது.
அணை திறப்பு குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, அணையின்
நீர்மட்டம் இப்போது சுமார் 75 அடி என்ற நிலையிலும், நீர் வரத்து சுமார் 2,500
அடி என்ற அளவிலுமே உள்ளது. இந்த நிலை நீடித்தால் 4 நாள்களுக்கு ஒரு அடிதான் உயரும்.
அணையின் நீர்மட்டம் 90 அடியிலும், நீர் வரத்து வினாடிக்கு 40 ஆயிரம் கன அடியும் இருந்தால் பாசனத்துக்கு தண்ணீரை திறக்கலாம்.
ஆனால் பருவமழை தொடங்காத நிலையில் அவசரமாக தண்ணீரை திறந்துவிட்டால் விவசாயிகள் நெல்லை விதைத்துவிடுவார்கள். பின்னர் தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் பெரிய பிரச்னை ஏற்படும்.
எனவே இந்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி பாசனத்துக்கு மேட்டூர் அணை திறக்க வாய்ப்பு இல்லை என்றனர் அதிகாரிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.