செம்மொழி மாநாடு: தயார் நிலையில் எண்ணெய் நிறுவனங்கள்!

கோவை, மே 21: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி கோவைக்கு வரும் வாகனங்களுக்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் தவிர்க்க பாரத் பெட்ரோலியம் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் (ஐஓசி), இந்துஸ்தான் பெட்ரோலியம் (
Updated on
2 min read

கோவை, மே 21: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி கோவைக்கு வரும் வாகனங்களுக்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் தவிர்க்க பாரத் பெட்ரோலியம் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் (ஐஓசி), இந்துஸ்தான் பெட்ரோலியம் (எச்பிசிஎல்) ஆகிய நிறுவனங்கள் சில முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

செம்மொழி மாநாடு கோவையில் ஜூன் 23 முதல் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி அனைத்து அரசுத் துறைகள் சார்பில் பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. மாநாட்டின் துவக்க விழாவில் மட்டும் ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆய்வரங்க நிகழ்ச்சிகளில் கட்டுரையாளர்கள், பேராளர்கள், வெளிநாட்டு அறிஞர்கள் என ஏறத்தாழ 5 ஆயிரம் பேர் பங்கேற்பர் எனத் தெரிகிறது. ஆய்வரங்குகளில் பங்கேற்பவர்களுக்கு தங்கும் இடத்தில் இருந்து மாநாடு நடைபெறும் கொடிசியா தொழிற்காட்சி வளாகத்துக்கு வால்வோ பஸ்களில் அழைத்து வரப்படுவர்.

குடியரசுத் தலைவர், பிற மாநிலங்களின் ஆளுநர்கள், முதல்வர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் என மிக முக்கிய விருந்தினர்கள், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சிறப்பு அழைப்பாளர்கள் மாநாட்டில் பங்கேற்கின்றனர். இவர்களுக்கு தனி வாகனங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.  

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட குளிர் சாதன வசதி உடைய சுற்றுலா வாகனங்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.  இதன்படி, குறைந்தபட்சம் 500-லிருந்து 1000 வாகனங்கள் வாடகைக்கு எடுக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதைத் தவிர தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள், வெளியூர்களில் இருந்து வரும் அரசியல் கட்சிப் பிரமுகர்கள் என மாநாட்டின் துவக்க விழா மற்றும் நிறைவு விழாவுக்கு வாகனங்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருக்கும்.

இத்தனை வாகனங்களும் கோவைக்கு வரும்பட்சத்தில் பெட்ரோல், டீசல் தேவை வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலாக இருக்கும். அத்தகைய சமயத்தில் தட்டுப்பாடு ஏற்படாமல் தவிர்க்க ஐஓபி, பிபிசிஎல், எச்பிசிஎல் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.  செம்மொழி மாநாட்டின்போது எத்தனை வாகனங்கள் வந்தாலும் அவற்றுக்குத் தேவையான பெட்ரோல், டீசல் வழங்க முடியும் என்கிறார் பாரத் பெட்ரோலியம் நிறுவன மண்டல மேலாளர் (சில்லரை வர்த்தகம்) ஆர்.சோமசுந்தரம்.

கோவையில் உள்ள மொத்த பெட்ரோல் பங்குகளில் 40 சதம் பிபிசிஎல் நிறுவனத்தைச் சார்ந்தவை. மேலும் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து குழாய் மூலம் கோவைக்கு பெட்ரோல், டீசல் அனுப்பி வைக்கப்படுகிறது. ஒரு மாதத்துக்குத் தேவையான எரிபொருளை கோவையில் சேமித்து வைக்க முடியும். மேலும் பிபிசிஎல் குழாய்களின் வழியாகத்தான் ஐஓசி, எச்பிசிஎல் நிறுவனங்களுக்கும் எரிபொருள் வந்து கொண்டிருக்கிறது.

இதனால், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை. எதிர்பாராத விதமாக ஸ்டிரைக் நடந்தால் கூட அதையும் சமாளிக்கும் வகையில், எண்ணெய் நிறுவனங்களிடம் லாரிகள் இருக்கின்றன. செம்மொழி மாநாட்டையொட்டி அனைத்து பெட்ரோல் பங்குகளும் 24 மணி நேரமும் இயங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.

"கோவை நகரில் இந்தியன் ஆயில் கார்ப்பொரேசனுக்கு 20 பெட்ரோல் பங்குகள் இருக்கின்றன.

ஐஓசி பங்குகளில் கோவையில் நாளொன்றுக்கு 60 கிலோ லிட்டர் பெட்ரோல், 220-லிருந்து 250 கிலோ லிட்டர் டீசல் விற்பனையாகிறது. ஒவ்வொரு பங்கும் குறைந்தபட்சம் 3 நாளைக்குத் தேவையான பெட்ரோல், டீசலை இருப்பு வைத்திருப்பார்கள். மாநாட்டையொட்டி கூடுதல் இருப்பு வைக்க அறிவுறுத்தியுள்ளோம். இதனால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு கிடையாது. பணம் பாதுகாப்பு காரணங்களுக்காக சில பெட்ரோல் பங்குகளில் இரவு நேரங்களில் விநியோகம் செய்வதில்லை.

மற்றபடி அனைத்து பங்குகளும் வழக்கம்போல 24 மணி நேரமும் செயல்படும்' என்று ஐஓசி பெட்ரோல், டீசல் விற்பனை பிரிவு அதிகாரிகள் கூறுகின்றனர். இதே கருத்தை எச்பிசிஎல் அதிகாரிகளும் கூறுகின்றனர். எச்பிசிஎல் நிறுவனத்துக்கும் கோவை மாநகரில் 20 பங்குகள் இருக்கின்றன. இவற்றில் தேவையான அளவுக்கு இருப்பு வைக்கும் வசதி இருக்கிறது என்கின்றனர்.  

ஆக, செம்மொழி மாநாட்டின்போது கோவையில் வாகனங்களுக்கு எரிபொருள் தட்டுப்பாடு என்ற பிரச்னைக்கு இடமிருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com