ஈரோடு, அக். 10: அண்மையில் பெய்த கனமழை காரணமாக சாலைகளை இழந்துள்ள மலை கிராமங்கள், வெளி உலகத் தொடர்பு இல்லாமல் துண்டிக்கப்பட்டுள்ளன.
சாலை மிக மோசம்
ஈரோடு மாவட்டம், பர்கூர் வனப்பகுதிக்கு உள்பட்ட மேற்கு மலைப் பகுதியில் சுமார் 15 மலை கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
அந்தியூர்-மைசூர் சாலையில் தாமரைக்கரையிலிருந்து மேற்கில் செல்லும் சாலை 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கொங்காடை கிராமத்தில் முடிகிறது. இந்த மலை கிராம மக்கள் தங்களின் வாழ்வியல் தேவைக்கு அந்தியூர் வந்து செல்ல இந்த வனச்சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர்.
தாமரைக்கரை-கொங்காடை வனச்சாலையில் மணியாச்சிமேடு என்ற இடம் வரை 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை உரிய முறையில் பராமரிக்கப்படவில்லை. இதனால், தினமும் இருமுறை மணியாச்சிமேடு வரை சென்று வந்த அரசுப் பஸ்கள், 5 கிலோ மீட்டருக்கு முன்புள்ள தாளகரையோடு திரும்பி விடுகின்றன.
கரணம் தப்பினால் மரணம்
மணியாச்சிமேட்டிலிருந்து மலைச்சரிவு வழியாக ஒன்னகரை பிரிவு வரையிலான 4 கிலோ மீட்டர் சாலை மிக அடர்த்தியான வனப்பகுதி. இங்கு வனத்துறை மூலம் அமைக்கப்பட்ட சாலையில் வேன் மற்றும் டெம்போக்களைப் பயன்படுத்தி மலை கிராம மக்கள் தினமும் அந்தியூர் சென்று வருகின்றனர்.
இந்த சாலையில் செல்லும் வாகனங்கள், கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில்தான் சென்று வருகின்றன.
இந்த மலைப் பகுதியில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக, மணியாச்சிமேடு-ஒன்னகரை சாலையில் மிக மோசமாக அரிப்பு ஏற்பட்டுள்ளது. மணியாச்சிபள்ளம் சரிவில் உள்ள ஓடையில் பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், 4 நாட்களாக இந்தக் கிராம மக்கள் வீட்டிலேயே முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சாலையில் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் கொங்காடையிலிருந்து அந்தியூர் செல்லும் மக்கள், ஒன்னகரை பிரிவு வரை வாகனங்களில் வந்து, அங்கிருந்து மணியாச்சிமேட்டுக்கு 4 கிலோ மீட்டர் நடந்து சென்று, அங்கிருந்து வேறொரு வாகனத்தைப் பிடித்துச் செல்கின்றனர். இதனால் அந்தியூர் சென்றுவர | 60 செலவு செய்த மக்கள், தற்போது | 100 வரை செலவு செய்ய வேண்டியுள்ளது.
அனைத்துப் பணிகளும் முடக்கம்
மேலும், மணியாச்சிமேட்டிலிருந்து-கொங்காடை வரை, ஒரு உண்டு உறைவிடப் பள்ளி உட்பட 5 அரசுப் பள்ளிகள் மற்றும் 5 குழந்தைத் தொழிலாளர் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் செல்வதும், உணவுப்பொருட்கள் கொண்டு செல்வதும் தடைபட்டுள்ளது.
வன சேகரப் பொருட்களை அந்தியூர் சந்தைக்குக் கொண்டு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் கோயில்நத்தம் மற்றும் கொங்காடை கிராமங்களில் ரேஷன் கடைகள் இருந்தாலும், பொருட்களை கொண்டு செல்ல முடியாத அளவுக்கு சாலையில் அரிப்பு ஏற்பட்டுள்ளதால், கொங்காடை கிராமத்தை சேர்ந்தவர்களும் இனிமேல், 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தாமரைக்கரைக்கே வந்தாக வேண்டும்.
அமைச்சர் பார்வையிட்டும் நடவடிக்கை இல்லை
மணியாச்சிமேட்டிலிருந்து- ஒன்னகரை வரையிலான சாலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதி என்பதால், இங்கு சாலை அமைப்பதற்கு அனுமதி பெற முடியாத நிலை உள்ளது.
இதுகுறித்து அந்தியூர் பேரூராட்சித் தலைவர் வெங்கடாசலம், வனத்துறை அமைச்சர் செல்வராஜ் கவனத்துக்குக் கொண்டு சென்று, கடந்த ஜூலையில் அவரை அழைத்து வந்து சாலை மற்றும் பாலம் கட்டவேண்டிய இடத்தையும் காட்டினார். இதன்பிறகும் சாலை அமைக்கவோ, பாலம் கட்டவோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.