உதகை, ஜன. 8: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக.வுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சியினரும் ஓரணியில் திரள வேண்டும் என்று, பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
தமிழக பாஜக சார்பில் நடைபெறும் தாமரை ரத யாத்திரை சனிக்கிழமை உதகை வந்தது. யாத்திரைக்கு தலைமை வகித்து வந்த பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியது:
2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் எந்தத் தவறும் நடக்கவில்லை என்று, மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறியிருப்பது, எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை’ என்ற பழமொழியை நினைவூட்டுகிறது. இந்தப் பிரச்னை தொடர்பாக பிரதமரே, ஆ.ராசாவுக்கு கடிதம் அனுப்பியது தொடர்பாக கபில் சிபல் எந்த விளக்கமும் தரவில்லை.
அதேபோல் ராசாவும், பிரதமருக்கும் சட்ட அமைச்சருக்கும் உரிய விளக்கமளிக்கவில்லை. இதை கபில் சிபலும் குறிப்பிடவில்லை. முறைகேடு நடக்கவில்லை என்றால், கபில் சிபல் மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், 119 நிறுவனங்களுக்கு உரிமம் பெற்றது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது ஏன்?
தொலைதொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல், ஸ்பெக்ட்ரம் தொடர்பான விசாரணை முடியும் வரை, அதுகுறித்து கருத்து தெரிவிக்கக் கூடாது. அவரது கருத்து விசாரணையின் திசையை மாற்ற நடக்கும் முயற்சியாகவே உள்ளது. ஐந்து மாநிலங்களின் தேர்தலை மனதில் கொண்டே, அவர் அவசரமாகச் செயல்படுகிறார்.
ரூ. 1.76 லட்சம் கோடி ஊழல் காங்கிரஸ் ஆட்சியில் நடக்கவில்லை எனவும், முந்தைய பாஜக ஆட்சியில்தான் நடந்துள்ளதாகவும் கூறுவது உண்மைக்குப் புறம்பானது. இந்தப் பிரச்னையில் பாஜக தெளிவாக உள்ளது. அதனால்தான் கடந்த 98-ம் ஆண்டிலிருந்தே விசாரணைக்குத் தயார் என்று அறிவித்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் திமுக-வைக் காப்பாற்ற காங்கிரஸ் முயல்வதன் மூலம், இது அரசியலுக்கு அப்பாற்பட்ட ஊழல் கூட்டணி என்பது தெளிவாகியுள்ளது. கிராமங்கள் தோறும் மக்கள் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்தே பேசுகின்றனர்.
தமிழக சட்டசபையில் ஆளுநர் உரை, வாக்குகளைக் குறி வைத்து தயாரிக்கப்பட்டதாகும். கலைஞர் வீட்டு வசதி திட்டம் உள்ளிட்ட அறிவிப்புகள், தமிழக சட்டப் பேரவைத் தேர்தலை மனதில் வைத்தே கூறப்பட்டுள்ளன.
ஸ்பெக்ட்ரம் ஊழலால் திமுக-வில் ஒரு சில குடும்பங்கள் பயனடைந்துள்ளன. விவசாய நிலங்கள் தொடர்ந்து அபகரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால், மக்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்படும். எனவே, திமுக-வைத் தோற்கடிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
நெருக்கடி நிலைக் காலத்தில், காங்கிரûஸத் தோற்கடிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தது போல, தற்போதும் திமுக-வுக்கு எதிராக ஒருங்கிணைய வேண்டும் என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.