"விளையாட்டுப் பயிற்சிகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'

ஈரோடு, ஜன. 8: பள்ளிகளில் அளிக்கும் விளையாட்டுப் பயிற்சிகளை மாணவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று, ஆசிய கோப்பை கபடிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய மகளிர் கபடி அணி வீராங்கனை எஸ்.கவி
Updated on
1 min read

ஈரோடு, ஜன. 8: பள்ளிகளில் அளிக்கும் விளையாட்டுப் பயிற்சிகளை மாணவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று, ஆசிய கோப்பை கபடிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய மகளிர் கபடி அணி வீராங்கனை எஸ்.கவிதா தெரிவித்தார்.

  ஈரோடு ரங்கம்பாளையம் மீனாட்சி சுந்தரனார் செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விளையாட்டு விழாவுக்கு, செங்குந்தர் கல்விக் கழகத் தலைவர் ஆர்.எம்.சண்முகவடிவேல் தலைமை வகித்தார்.

  மாவட்ட விளையாட்டு அலுவலர் வி.கருணாநிதி, செங்குந்தர் கல்விக் கழகச் செயலர் எஸ்.சிவானந்தம், பள்ளி தாளாளர் ஆர்.மோகன்ராஜ், தலைமை ஆசிரியர் (பொறுப்பு) டி.சாவித்திரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கி (படம்), கபடி வீராங்கனை கவிதா பேசியது:

  விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் இயல்பானது. வெற்றியடையும்போது பாராட்டுகளும், தோல்வியடையும்போது ஏளனப் பேச்சும் வரும். இரண்டையும் சமமாக நினைத்து, தொடர்ந்து முயற்சி செய்தால் சாதனை படைக்கலாம்.

  இந்திய அணிக்காக விளையாடும்போது, மொழி பிரச்னையும் சேர்ந்து கொண்டது. சவால்களை எதிர்கொள்ளும் திறமையை வளர்த்துக் கொண்டால், வெற்றிகளைக் குவிக்க முடியும்.

  விளையாட்டு, பெருமையைத் தேடித் தருவதோடு, நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையையும் கொடுக்கிறது.

  பள்ளிப் பருவத்தில் மாணவர்கள் முறையாக விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். பள்ளிகளில் அளிக்கப்படும் பயிற்சிகளை மாணவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

குடும்பத்தாரால் கைவிடப்பட்ட முதியோர்:

பொருளுதவி பெற்றுத் தர நடவடிக்கை

ஈரோடு, ஜன.8: குடும்பத்தாரால் கைவிடப்பட்ட முதியோருக்கு, பொருளுதவி பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தா.சவுண்டையா தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: குடும்பத்தாரால்

கைவிடப்பட்ட பெற்றோர் மற்றும் முதியோர், தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் மற்றும் மருத்துவச் செலவுகளுக்கான பொருளுதவி பெறும் வகையில், மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.

  குழந்தைகள் உள்ள பெற்றோர் மட்டுமல்லாமல், தங்களின் சொத்துகளுக்கான சட்ட வாரிசுகளைக் கொண்ட முதியவர்களும் இந்த உதவியை பெற முடியும்.

  இதற்காக மாவட்டந்தோறும் ஒரு வாழ்க்கைப் பொருளுதவி அலுவலரை மாநில அரசு நியமித்துள்ளது.  தற்போது மாவட்ட சமூக நல அலுவலரே, வாழ்க்கைப் பொருளுதவி அலுவலராகச் செயல்படுகின்றனர்.

  முதியோர் நலத்தைப் பேணுவதும், சமரசம் செய்தல், வாழ்க்கைப் பொருளுதவி கோரும் வழக்கை தாக்கல் செய்ய இவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

  மேலும், ஈரோடு, கோபி வருவாய் கோட்டாட்சியர்கள் மற்றும் மாவட்ட சமூகநல அலுவலரிடம் மனு அளிக்கலாம்.

  உதவி வேண்டுவோர் 60 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். குழந்தைகள் அல்லது சொத்துகளுக்கான சட்டப்படி வாரிசுகளிடமிருந்து, வாழ்க்கைக்குத் தேவையான பொருளுதவி பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com