செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

இறுதிவிதி அரசிதழில் எப்போது வெளியாகும்?

கோவை, ஜூன் 21: நாடு முழுவதும் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் அமலாகிவிட்ட நிலையில், தமிழகத்தில் இச்சட்டத்திற்கான விதிகளை இறுதி செய்து அரசிதழில் வெளியிட காலதாமதமாகி வருகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்

Updated On :20 செப்டம்பர் 2012, 2:44 am

கோவை, ஜூன் 21: நாடு முழுவதும் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் அமலாகிவிட்ட நிலையில், தமிழகத்தில் இச்சட்டத்திற்கான விதிகளை இறுதி செய்து அரசிதழில் வெளியிட காலதாமதமாகி வருகிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21 (ஏ)-ல் கல்வியை அடிப்படை உரிமையாகக் கொண்டு, இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

÷கடந்த ஏப்ரல் 2010-ல் நாடு முழுவதும் இந்த சட்டம் அமலுக்கு வந்தது. கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதால், அந்தந்த மாநில அரசுகள் மாதிரி விதிகளை உருவாக்கி, அதை இறுதி செய்து அரசிதழில் வெளியிட வேண்டும்.

தமிழகத்தில் கடந்த 2011 ஜனவரி மாதத்தில் மாதிரி விதிகளை உருவாக்கி, பள்ளிக்கல்வி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக அமைக்க வேண்டிய குழுவில் கல்வி அதிகாரிகள் இடம் பெறுவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமப் பஞ்சாயத்து தலைவர்கள், உறுப்பினர்கள் தான் இந்தக் குழுவில் இடம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதன்பிறகு மாதிரி விதிகளை, இறுதி செய்ய காலதாமதமானது.

இப்போது இரண்டாவது கல்வியாண்டு தொடங்கிவிட்ட நிலையில், விதிகளை இறுதி செய்து அரசிதழில் வெளியிடுவது மேலும் காலதாமதமாகி வருகிறது. இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை ஏற்கெனவே இருந்த அரசும் கண்டுகொள்ளவில்லை. இப்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசும், இவ்விஷயத்தில் ஆர்வம் காட்டவில்லை என்று கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நலிவுற்ற பிரிவினருக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு: இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் முக்கிய அம்சமாக, அருகிலுள்ள தனியார் பள்ளிகளில் நலிவுற்ற பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு (எஸ்.சி., எஸ்டி., ஓ.பி.சி., சிறுபான்மையினர்) முதல் வகுப்பில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதாகும். அதுவும் எவ்வித கட்டணமும் வசூலிக்காமல் மாணவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் தமிழக அரசு இதுவரை விதிகளை இறுதி செய்து, அரசிதழில் வெளியிடாத காரணத்தால், தனியார் பள்ளிகள் இதுவரையில் நலிவுற்ற பிரிவினருக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்காமல் இருந்து வருகின்றன.

தனியார் பள்ளிகள், நலிவுற்ற பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று அரசு சுற்றறிக்கை அனுப்பியும் பயன் இல்லை. இது தொடர்பான விதிகள் அரசிதழில் வந்தால்தான், மாணவர் சேர்க்கையை நடத்த முடியும் என்று சில தனியார் பள்ளிகள் பகிரங்கமாக தெரிவித்துவிட்டன.

தமிழகத்தில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகளில் 1 சதவீதம் கூட இந்த சட்டவிதியின் கீழ் நலிவுற்ற மாணவர்கள் சேர்க்கப்படவில்லை என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தத்தளிக்கும் பள்ளிக் கல்வித் துறை: ஏற்கெனவே சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதில் இன்னும் இழுபறி தொடர்ந்து நீடிக்கிறது. மற்றொரு பக்கம் தனியார் பள்ளிகளின் வரம்பற்ற கட்டண வசூல், நீதிபதி ரவிராஜபாண்டியனின் புதிய கட்டண அறிவிப்பு பிரச்னை என பள்ளிக் கல்வித்துறை தத்தளித்து வருகிறது.

இந்த சட்டத்தின்படி "என்ட்ரி பாயின்ட்' என்ற வகையில் முதல் வகுப்பில் மாணவர்களை சேர்க்க வேண்டும். ஆனால், எத்தனை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் மெட்ரிக் பள்ளிகள் இயக்ககத்திடம் இல்லை.

மாணவர் சேர்க்கைக்கான கல்வி கட்டணத்தை அரசு எப்படி திரும்பச் செலுத்தும் என்பதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் தனியார் பள்ளிகள், இந்தச் சட்டத்தின் கீழ் மாணவர்களை சேர்க்க ஆர்வம் காட்டவில்லை என்று தெரிகிறது.

இது தொடர்பாக பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியது:

÷ஏற்கெனவே தனியார் பள்ளிகளின் கட்டண விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது. தனியார் பள்ளிகள் அதிகமாக கட்டணம் வசூலித்தால் யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாமல் பெற்றோர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் தொடர்பான விஷயத்தில் விதிகளை இறுதி செய்து அரசிதழில் வெளியிட வேண்டும். இச்சட்டத்தின்படி 25 சதவீத ஒதுக்கீட்டில் எத்தனை பள்ளிகளில், எத்தனை மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர் என்பதை கண்காணிக்க வேண்டும். மாணவர்களை சேர்க்காத பள்ளிகளுக்கு விளக்கம் கேட்கவும், இதுபற்றி அரசுக்கு தகவல் தெரிவிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

÷ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆனந்தகுமார் நம்பிக்கை வைத்து தனது மகளை அரசு பள்ளியில் சேர்த்துள்ளார். அதுபோல சாதாரண பொது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியது:

÷நலிவுற்ற பிரிவு மாணவர்களுக்கு இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீதம் இடம் ஒதுக்க வேண்டும் என்பதை ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தனியார் பள்ளிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

÷ஜூலை 31-ம் தேதி வரை தொடக்கப் பள்ளி முதல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் அலுவலகத்தில் சமர்ப்பிக்கும்படி தனியார் பள்ளிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. கல்வியாண்டு தொடங்கிய 6 மாதம் வரைக்கும், இந்த சட்டத்தில் மாணவர்களை சேர்த்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

÷மாணவர்களிடம் எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது. நுழைவுத் தேர்வு நடத்தக் கூடாது. போதிய சான்றிதழ் இல்லை என்று மாணவர்களை சேர்க்காமல் இருக்கக் கூடாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.