உதகை, ஏப். 28: திமுகவினர் மீது நில மோசடி வழக்கு தொடர்வது விசித்திரமானது எனவும், நில மோசடி தொடர்பான புகார்களை 2001ம் ஆண்டிலிருந்தே விசாரிக்க வேண்டுமெனவும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சட்டப்பேரவையில் ஜனநாயகம் படும்பாடு என்ற தலைப்பில் உதகையில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது:
தமிழக சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னைகள் குறித்துப் பேச எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. அதனால்தான் அதை மக்கள் மன்றத்தில் பேசுகிறோம். திமுகவின் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளை எழுப்புவதால் அதற்கு பதிலளிக்க முற்படும்போது அவையிலிருந்து வெளியேற்றி விடுகின்றனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துகளும் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படுகின்றன.
திமுக ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்களாக கொண்டு வரப்பட்டவை அனைத்தும் இந்த ஆட்சியில் ரத்து செய்யப்படுகிறது. அதனால் நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற வேண்டிய நிலை உள்ளது. அரசின் பல முடிவுகளுக்கு நீதிமன்றம் எதிரான கருத்துகளை தெரிவித்துள்ளதால் தமிழகத்தில் தற்போது நீதிமன்ற ஆணைக்கு உட்பட்ட ஆட்சியே நடக்கிறது. மாற்றத்தை வேண்டி வாக்களித்த மக்களுக்கு தற்போது ஏமாற்றமே பரிசாகக் கிடைத்துள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடனேயே பால் விலை உயர்வு, பேருந்துக் கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு என ஒவ்வொரு கட்டணமாக உயர்த்திக் கொண்டே வருகின்றனர். ஆனால், திமுக ஆட்சியில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்ததால் எந்த கட்டணத்தையுமே உயர்த்தவில்லை.
அதிமுக அரசு, திமுகவினர் மீது நில மோசடி வழக்குத் தொடர்வது விசித்திரமானது. இது தொடர்பான புகார்களை 2001ம் ஆண்டிலிருந்தே விசாரிக்க வேண்டும். என் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் எந்த நடவடிக்கையையும் ஏற்க தயாராகவே உள்ளேன்.
இத்தொகுதியின் மக்களவை உறுப்பினரான ஆ.ராசா தற்போது சிறையிலிருந்தாலும் மக்கள் நலத் திட்டங்களை அங்கிருந்தே நிறைவேற்றி வருகிறார். ஹெச்பிஎப் தொழிற்சாலை புனரமைப்பிலிருந்து தேசிய நெடுஞ்சாலை பணிகள் வரை அவர் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார் என்றார் ஸ்டாலின்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








