மாற்றுத்திறன் குழந்தைகளுக்காக பள்ளிகளில் நவீன கழிப்பறை வசதிகள்!

கோவை, ஜூலை 10: அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் ரூ.1.74 கோடியில் 348 கழிப்பறைகள் ஏற்படுத்தப்பட உள்ளன.  தமிழகத்தில் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளை பள்ள
Updated on
2 min read

கோவை, ஜூலை 10: அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் ரூ.1.74 கோடியில் 348 கழிப்பறைகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

 தமிழகத்தில் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதற்கு மாநில அளவில் சிறப்புக் கவனம் மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வித் திட்டத்தில் நிதி ஒதுக்கி மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

 மாநிலம் முழுவதும் 1,46,282 மாற்றுத்திறன் குழந்தைகள் இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதில், கோவையில் மட்டும் 2012-13ம் ஆண்டில் 7,025 மாற்றுத்திறன் குழந்தைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

 கோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுமார் 2,500 பள்ளிகளில் மாற்றுத்திறன் குழந்தைகள் உள்ளனர்.

 7,025 மாற்றுத்திறன் குழந்தைகள்: மாற்றுத் திறன் குழந்தைகளில் குறைந்த அளவிலான கண்பார்வை குறைபாடு- 486, முழுவதும் கண்பார்வையற்றோர்-111, வாய்பேச முடியாதோர் -818, செவித்திறன் குறைபாடு உள்ளவர்கள்- 905, உடல் ஊனமுற்றோர்-1402, மனவளர்ச்சி குன்றியோர்- 2071, மூளைத்திறன் குறைபாடு- 263, புற உலக சிந்தனை அற்றோர்- 91, தசை சிதைவு- 37, இயக்க குறைபாடு- 85, தொழுநோய் பாதித்தவர்கள்- 85 உள்பட 7,025 மாற்றுத்திறன் குழந்தைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

 இவர்களில் ஓரளவுக்கு குறைபாடு உள்ளவர்களில் 5,414 பேர் பள்ளிகளில் சென்று படித்து வருகின்றனர். இதுதவிர பகல் நேர பாதுகாப்பு மையம், வள மையங்கள் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.

 இதில் 1,250 மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளிகளுக்குச் சென்று வர இயலாத நிலையில் வீடுகளிலேயே உள்ளனர். இவர்களுக்கு அரசு சார்பில் உதவித் தொகை வழங்கப்பட்டு கல்வி கற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 நடப்பாண்டில் ரூ.112 கோடி நிதி ஒதுக்கீடு: ஒருங்கிணைந்த கோவை திட்டத்தின் கீழ் 2012-13ம் ஆண்டிற்கு மொத்தமாக ரூ.112.71 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் நகர்ப்புற வசதிகள் மறுக்கப்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான உண்டு உறைவிடப் பள்ளி ரூ.68 லட்சத்தில் அமைக்கப்பட உள்ளது.

 மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு போக்குவரத்து வசதிக்கென ரூ.52 லட்சம், பள்ளி செல்லாக் குழந்தைகள் மையங்களுக்கு நிதி ஒதுக்கீடு ரூ.3 கோடி, புதிய ஆசிரியர் ஊதியம் ரூ.49 கோடி, வட்டார வள மைய செலவினமாக ரூ.7 கோடி, குறுவள மைய செலவினமாக ரூ.9 கோடி உள்பட ரூ.112 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.4 கோடி அளவுக்கு பணிகள் நடைபெற்றுள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருவதாக, அனைவருக்கும் கல்வி இயக்க உதவி திட்ட அலுவலர் வே.சாந்தா தெரிவித்தார்.

 348 கழிப்பறை வசதிகள்: "மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மேம்பாட்டுக்கென தனியாக ரூ.4.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் குழந்தைகளுக்கு வசதியான வகையில் சுமார் 348 கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. சுமார் ரூ.1.74 கோடியில் இப் பணிகள் நடைபெற உள்ளன.

 மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் வகுப்பறைக்குச் செல்ல ஏதுவாக 131 சாய்வு தள பாதை மற்றும் கைப்பிடிகளும் அமைக்கப்பட உள்ளன.

 தனிநபர் கல்வித் திட்டத்தின் மூலம் மாற்றுத்திறன் குழந்தைகளின் திறன், நடக்கும் திறன், படிக்கும் திறன் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து, கணினியில் தகவல் பதிவு செய்யப்படும். இந்த ஆய்வுகள் ஆகஸ்ட், டிசம்பரில் செய்யப்படும்' என்றார் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் சுபாஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com