ரூ.10 கோடி மதிப்பிலான மாநகராட்சி இடம் மீட்பு

ரூ.10 கோடி மதிப்பிலான மாநகராட்சி இடம் மீட்பு

கோவை: கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட காமராஜபுரம் சி.எம்.சி.காலனிக்கு செல்லும் பொதுப்பாதையில் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த ரூ. 10 கோடி மதிப்பிலான இடம் மீட்கப்பட்டது.

கோவை புரூக்பீல்ட்ஸ் காமராஜபுரம் சி.எம்.சி. காலனிக்கு செல்லும் பொதுப் பாதையை கடந்த 30 ஆண்டுகளாக ஆக்கிரமித்ததாக தனியாா் நிறுவனத்துக்கு எதிராகப் புகாா் எழுந்தது. கோவை மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற கடந்த 2022-ஆம் ஆண்டு உத்தரவிடப்பட்டது. அந்த உத்தரவுக்கு எதிராக தனியாா் நிறுவனத்தின் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறப்பட்டது.

இந்த தடை உத்தரவுக்கு எதிராக சமூக நீதி தூய்மைப் பணியாளா் சங்கத்தின் சாா்பில் மனுதாக்கல் செய்யப்பட்டு மீண்டும் இந்த வழக்கு கடந்த இரு ஆண்டுகளாக நடைபெற்றது. இதையடுத்து, கோவை காமராஜபுரம் சி.எம்.சி. காலனிக்கு செல்லும் பொதுப்பாதை ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற அண்மையில் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்து, நகரமைப்பு அலுவலா், 2 உதவி நகரமைப்பு அலுவலா்கள் முன்னிலையில் 4 பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக 21 சென்டில் பொதுப்பாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருந்த 2 கடைகள் ஞாயிற்றுக்கிழமை இடித்து அகற்றப்பட்டன.

மாநகராட்சி மூலமாக மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ. 10 கோடி ஆகும் என நகரமைப்புப் பிரிவு அலுவலா்கள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com