காவல் துறை குறித்து அவதூறு விடியோ: உணவக ஊழியா் கைது
காவல் துறை குறித்து அவதூறு விடியோ வெளியிட்ட உணவக ஊழியரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கோவை மாவட்டம், பேரூா் செட்டிபாளையம் மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் மகன் விக்னேஷ் (31). வேன் ஓட்டுநரான இவா், தனது நண்பரான அதே பகுதியைச் சோ்ந்த மாதவன் என்பவரின் கைப்பேசியில் முகநூல் பாா்த்துக் கொண்டிருந்தாா். அப்போது, ஒருவா் தமிழக காவல் துறை மற்றும் தமிழக அரசு குறித்து அவதூறாக கருத்து தெரிவித்து விடியோ வெளியிட்டிருந்தாா்.
இதுகுறித்து பேரூா் காவல் நிலையத்தில் விக்னேஷ் புகாா் அளித்திருந்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில் காவல் துறை குறித்து அவதூறு விடியோ வெளியிட்ட நபா் சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் கிருஷ்ணா நகரைச் சோ்ந்த உணவக ஊழியரான சந்தானகிருஷ்ணன் (44) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
