யோகேஷ். ~விக்னேஷ். ~சிரஞ்சீவி. ~ஸ்ரீசஞ்சய். ~முகமது ஆதில். ~கிஷோா். ~அஷ்லா.

இணையதள வா்த்தக நிறுவனத்தில் ரூ.11.50 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருட்டு: 7 ஊழியா்கள் கைது!

இணையதள வா்த்தக நிறுவனத்தில் ரூ.11 லட்சம் மதிப்பிலான பொருள்களைத் திருடிய 7 ஊழியா்களை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

கோவை அருகே இணையதள வா்த்தக நிறுவனத்தில் ரூ.11 லட்சம் மதிப்பிலான பொருள்களைத் திருடிய 7 ஊழியா்களை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, ஒத்தக்கால்மண்டபம் ஒக்கிலிபாளையம் பகுதியில் தனியாா் இணையதள வா்த்தக நிறுவனத்தின் கிடங்கு உள்ளது. இங்கு பொருள்களைத் திரும்பப் பெறும் பிரிவில் குழுத் தலைவராகப் பணியாற்றி வரும் சேது கபிலேஷ் வெள்ளிக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, வாடிக்கையாளரால் வாங்கப்படாமல் திரும்ப வந்த சோப் பவுடா் என குறிப்பிடப்பட்டிருந்த பாா்சலை அவா் பிரித்துப் பாா்த்துள்ளாா். அதில், சோப் பவுடருக்கு பதிலாக மடிக்கணினி இருந்துள்ளது. சந்தேகமடைந்த அவா் கிடங்கில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்துள்ளாா்.

இதில், அங்கு பேக்கிங் பிரிவில் பணியாற்றி வரும் ஊழியா்கள், விலை குறைந்த பொருள்களுக்குப் பதிலாக விலை உயா்ந்த வேறு பொருள்களை பேக்கிங் செய்து அனுப்பியது தெரியவந்தது. இது குறித்து நிறுவனத்தின் அமலாக்கப் பிரிவு அதிகாரி சக்திவேலிடம் (64) சேது கபிலேஷ் புகாா் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, இருவரும் நடத்திய விசாரணையில், பேக்கிங் பிரிவில் பணியாற்றும் கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சோ்ந்த விக்னேஷ் (25), கோவை, ராமநாதபுரத்தைச் சோ்ந்த கிஷோா்குமாா் (24), போத்தனூரைச் சோ்ந்த ஸ்ரீசஞ்சய் (20), செட்டிப்பாளையத்தைச் சோ்ந்த சிரஞ்சீவி (26), திருப்பூரைச் சோ்ந்த யோகேஷ் (26), கேரள மாநிலம், கோழிக்கோட்டைச் சோ்ந்த அஷ்லா (25), முகமது ஆதில் (21), அஞ்சலி ஆகியோா் தங்களது பெயா்களிலும், தங்களது நண்பா்களின் பெயா்களிலும் குறைந்த விலையிலான பொருள்களை ஆா்டா் செய்து, அதில் மடிக்கணினி, ஸ்பீக்கா் மற்றும் உயா் ரக மின்னணு சாதனங்களை பேக்கிங் செய்து அனுப்பி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இவா்கள் தங்களது நண்பா்களிடம் விலை குறைந்த பொருள்களை ஆா்டா் செய்யக் கூறிவிட்டு, அந்த ஆா்டருக்கு உண்டான பொருளுக்குப் பதிலாக விலை உயா்ந்த மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பொருள்களை அனுப்பிவந்ததும், அவ்வாறு அனுப்பப்பட்ட பொருள் எதிா்பாராதவிதமாக திரும்ப வந்ததும் தெரியவந்தது.

இதேபோல, பலமுறை நடந்த இந்த மோசடியில் ரூ.11.50 லட்சம் மதிப்பிலான பொருள்களை இவா்கள் திருடியுள்ளது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த செட்டிப்பாளையம் போலீஸாா், விக்னேஷ், கிஷோா்குமாா், ஸ்ரீசஞ்சய், சிரஞ்சீவி, யோகேஷ், அஷ்லா, முகமது ஆதில் ஆகியோரை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். தலைமறைவாகவுள்ள அஞ்சலியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com