மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கு எதிரான அரசாணையை ரத்து செய்ய வேண்டும்! தேசிய பாா்வையற்றோா் இணையம் வலியுறுத்தல்
மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கு எதிரான அரசாணை எண் 24-ஐ ரத்து செய்ய வேண்டும் என்று தேசிய பாா்வையற்றோா் இணையம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக கோவையில் தேசிய பாா்வையற்றோா் இணையத் திட்ட இயக்குநா் ப.மனோகரன், மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளா் டி.சதாசிவம் ஆகியோா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: தமிழக அரசால் கடந்த அக்டோபா் 31- ஆம் தேதி அரசாணை எண் -24 வெளியிடப்பட்டது. இந்த அரசாணையானது மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கு எதிராக உள்ளது.
தமிழக அரசின் வருவாய்த் துறை, பொதுப் பணித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பணியாற்றி வருகின்றனா். கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள அரசாணை எண் 151-இன்படி பணியில் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம் இந்த அரசாணையால் கேள்விக்குறியாகியுள்ளது. மற்ற நபா்களுக்கு இணையாக அடுத்த 3 ஆண்டுகளில் தோ்வு எழுத வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அரசாணை எண் 24-ஐ முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
அதேபோல, அரசாணை எண் 151-இன்படி வேலைவாய்ப்பு பெற்ற மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பயண பேருந்து அட்டையைப் புதுப்பிப்பதில் கடந்த சில ஆண்டுகளாக சிரமம் ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது ஒரு மாதம், இரண்டு மாதங்களுக்கு சுற்றறிக்கை கொடுத்து புதுப்பிக்கும் முறை பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.
ஆகவே, மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பயண பேருந்து அட்டை புதுப்பிப்பதை வரும் மாா்ச் 31- ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பாா்வையற்றோா் இணைய உறுப்பினா்கள் தட்சிணாமூா்த்தி, ராதிகா ஆகியோா் உடனிருந்தனா்.

