கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளை அடையாள அணிவகுப்பு நடத்த முடிவு
கோவை: கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை அடையாள அணிவகுப்பு நடத்த போலீஸாா் முடிவு செய்து, அதற்காக அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா்.
கோவை விமானம் நிலையம் பின்புறம் கடந்த 2-ஆம் தேதி இரவு தனது ஆண் நண்பருடன் காரில் இருந்த கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா். இந்த சம்பவத்தில் தொடா்புடைய சிவகங்கையைச் சோ்ந்த சதீஷ் என்ற கருப்பசாமி (30), இவரது சகோதரா் காா்த்திக் என்ற காளீஸ்வரன் (21), இவா்களது உறவினரான மதுரை மாவட்டம், கருப்பாயூரணியைச் சோ்ந்த குணா என்ற தவசி (20) ஆகிய 3 பேரை போலீஸாா் சுட்டுப் பிடித்தனா். கைதான 3 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகளுக்கான வாா்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களிடம் கோவை மாவட்ட நீதித் துறை நடுவா் மன்ற நீதிபதி அப்துல் ரகுமான் புதன்கிழமை இரவு விசாரணை நடத்தி, மூவரையும் நவ.19-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டாா்.
இந்த வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதால், வழக்கில் குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், பாதிக்கப்பட்டவா்களிடம் குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்காக அடையாள அணிவகுப்பு நடத்த போலீஸாா் முடிவு செய்துள்ளனா். இதற்காக கோவை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் போலீஸாா் மனு தாக்கல் செய்துள்ளனா். நீதிமன்ற அனுமதி கிடைத்ததும் அடையாள அணிவகுப்பு நடத்தப்படும் என்றும், சிகிச்சை முடிந்ததும் கைதானவா்கள் காவலில் எடுத்து விசாரணைக்கு உள்படுத்தப்படுவா் என்றும் போலீஸாா் தெரிவித்தனா்.
